பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இனிய நெறி

83


தமரைக் காண்பது அரிது. இல்லையென்றே கூறலாம். இன்று ‘தமர்’ என்று கூறப்படுபவரெல்லாம் பெரும்பாலும் உடல் தொடர்புடையவரேயாம். அவர்களுடைய நாட்டமெல்லாம் தன்னலமே! ஒன்றுதலல்ல! கண்டவரும் கேட்டவரும் தமராகார். உடம்பிடை உயிரன்ன ஒன்றித்து உடனிற்போரே தமர். அத்தகைய தமர், தனக்குப் பிழை செய்யின் அப்பிழையைப் பொறுத்தாற்ற வேண்டும். எப்பிழையைப் பொறுத்தாற்றல் வேண்டும்? இருவர் கூட்டில் இயங்கும் பணிகளில் தோன்றும் பிழையையா? கடமைகளில் தோன்றும் கவனக்குறைவையா? இல்லை! கடமைகளில் தோன்றும் பிழைகள் மன்னிக்க முடியாதன. ஆதலால், “தற்றப்பின்” என்றார் ஆசிரியர். தன்னை நோக்கி மரியாதை மரபில் செய்யும் பிழை. இருவர் ஒன்றாகிப் பழகித் தமர் தகுதியை அடைந்தாலே தீங்குதரும் பிழை தோன்றாது. ஒரோவழித் தோன்றினாலும் அஃது அற்பமாகிவிடும். ஒரோவழித் தன்னுடைய சிறப்புக்கு எதிரான பிழை செய்தாலும் அதைப் பொறுத்தாற்ற வேண்டும். தன்னை நோக்கிச் செய்யும் பிழையைப் பொறுக்க வேண்டுமென்று ஆசிரியர் கூறுகிறாரே தவிரக் கடமைகளின் பாற்பட்ட பிழையைப் பொறுக்கும்படி ஆசிரியர் சொல்லவில்லை. தமர் செய்யும் கடமைகளின் பாற்பட்ட பிழை தண்டனைக் குரியதல்ல; திருத்தத்திற்குரியது. ஆகத் தம்மைச் சார்ந்து நட்புறப் பயின்று தமரானோர் தனக்கு யாதேனும் பிழை செய்தாலும் அதனைத் தாங்கிக் கொள்ளாது - பொறுத்தாற்றாது ஒறுத்தல் அல்லது வெறுத்தொதுக்கல் சிறந்த தலைமைக்கு ஆகாது. குற்றங்காணப் புகின் குற்றங்கள் குறையா. குற்றங்கள் பெருகி வளரும். கடுகனைய குற்றமும் மலைபோலத் தெரியும். நிறை தெரியாது. இந்தச் சூழல் உருவாகுமானால் நஞ்சொடு கலந்த பாலைப்போல நட்புக் கெடும். தமர் தன்மை வளராது. ஆதலால், பழகியோரிடத்தில் பிழை காணற்க! தற்சார்புடைய பிழையைத்தான் ‘காணற்க’