பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


"விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்
நாராயணனாய் நதிச்சடை முடியனாய்
பிறநாட் டிருப்போர் பெயர்பல கூறி
அல்லா! யெஹோவா! எனத்தொழு தன்புறும்
தேவருந் தானாய், திருமகள் பாரதி
உமையெனும் தேவியர் உகந்தவான் பொருளாய்
உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்
...பூமியில் எவர்க்கும் கடமை யெனப்படும்...

(விநாயகர் நான்மணி மாலை-8 வரி-11)

என்றும் பாரதி பாடுகிறான்.

இந்தியாவை மதச் சார்பற்ற நாடாக அரசியற் சட்டம் அறிவிப்பதற்கு முன்பே, தேசீயக் கவிஞன் கொள்கைப் பிரகடனம் செய்கிறான். ஆம்! பழுத்த கவிஞன்! மக்களுக்காகப் பிறந்து பாடிய கவிஞன்! அவன் எப்படி வேற்றுமையைத் தாங்கிக் கொள்வான்? பாரதி நூற்றாண்டு விழாக் கொண்டாடும் இந்த ஆண்டில் இந்தியா எந்தத் திசையில் சென்று கொண்டிருக்கிறது? அன்று ஆங்கிலேயன் அடிமைகளாக வாழும் இந்தியர்களைப் பார்த்துக் கேட்டானே, "உங்கள் சாதிச் சண்டை போச்சோ?” என்று! ஆம்! இன்னமும் இந்தியாவில் சாதிச் சண்டை போகவில்லை! இல்லை! சாதிச் சண்டை போக, அனுமதிக்க மறுக்கிறார்கள் இந்து மதத் தலைவர்கள்! சாதி வெறியர்கள்! சாதி மனப்பான்மையைக் கட்சிகள் வளர்க்கப் பயன்படுத்தும் புன்மை அரசியல்வாதிகள்! மதங்கள் தான் என்ன செய்து கொண்டிருக்கின்றன? இன்று மக்களுக்காக மதம் இல்லை! மதத்திற்காக மக்கள் இருக்கிறார்கள்! இல்லை, சில பல குழுக்களாகப் பிரிந்து, மதத்தைப் பிழைப்பாக்கிக் கொண்டு ஜிவிப்பவர்கள் கையில் மதம் சிக்குண்டுவிட்டது. எனவே இந்தியாவில் அநாகரிகமான மதச் சண்டைகள், மதத் தலைவர்களின் சண்டைகள், மத மாற்றங்கள் அனைத்தும்