பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

99



தமிழ்மொழி வளர்ச்சி

ஒரு மொழி காலத்தின் தேவைகளை அறிந்து வளர்க்கப்பட வேண்டும். மொழி வளர்ச்சி, மொழியைப் பேசும் இனத்தின் அறிவு வளர்ச்சியாகவும் அறிவு வளர்ச்சி அவ்வினத்தின் தொழில் மேம்பாட்டு வளர்ச்சியாகவும், தொழில் மேம்பாட்டு வளர்ச்சி அவ்வினத்தின் பொருளாதார வளர்ச்சியாகவும், பொருளாதார வளர்ச்சி அவ்வினத்தின் நாகரிக மேம்பாட்டு வளர்ச்சியாகவும் படிமுறையில் துணை செய்வன. மொழி வளர்ச்சியைச் சாதாரணமாகக் கருதினால் அம்மொழி வளர்ச்சியொடு தொடர்புடைய அனைத்து வளர்ச்சிகளும் கெடும். அதோடு உலகத்து நாடுகள் தத்தம் மொழியை வளர்த்து அறிவை வளர்த்து மேம்பாடுற்று வளரும்போது நாம் உரியவாறு தமிழை வளர்க்கத் தவறினால் நாம் முன்னேறாதது மட்டுமின்றி, காலப்போக்கில் அடிமைகளாகவும் ஆக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனை பாரதி, தெளிவாக அறிந்து தமிழ் நாட்டை, தமிழ் மக்களை மொழி வளர்ச்சியில் ஆற்றுப்படுத்துகின்றான்.

மேற்கு நாடுகளின் மொழி வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி பாரதிக்கு ஓர் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு நாடுகளிலே கலைகள் வளர்வதைப் பாரதி கணக்கில் எடுத்துக் கொள்கிறான். அதுபோலத் தமிழ் வளர வேண்டும் என்று ஆசைப்படுகின்றான். ஆனால் தமிழரில் சிலர், தமிழில் அந்தக் கலைகள் வாரா என சொல்லுகின்றனர்; இன்னும் சொல்லி வருகின்றனர். அதனாலன்றோ தமிழ் பயிற்று மொழி இயக்கம் நிறைவான வெற்றி பெறவில்லை. தமிழில் அறிவியல் உண்மைகளைத் தாங்கி வெளிவரும் தாள்கள் குறைவு இல்லை! "கலைக்கதிர்" தவிர மற்றொன்று இல்லை. வழக்கமான அரை நிர்வாண படங்கள், காமவெறியூட்டும் கதைகள், தன்னம்பிக்கையை இழக்கத்தூண்டும் கிரகப்