பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

107


எந்த ஒரு சமுதாயமும் உயிர்ப்புடன் வாழ்ந்தால் கொள்வனவும் கழிப்பனவும் நிச்சயமாக இருக்கும். அதுவே உயிர்ப்பின் அடையாளம்! மாறுதல் உலகியற்கை. மாறாது அழியும் என்பது இயற்கையின் விதி. அதனாலன்றோ மாணிக்கவாசகர்,

"முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம் பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே!"

என்று அருளிச் செய்தார். அதாவது பழைமையே புதுமையாகிறது. பழைமை புதுமையானால் புதுமை பழைமையிலேயே ஊடுருவி உயிர்ப்புடன் விளங்குமானால் பழைமை புதுமைச் சண்டைகள் வாரா!

ஆனால், நமது நாட்டில் பழைமைக்கும் புதுமைக்கும் இடையில் உள்ள இடைவெளி அதிகம். பழைமை வளர்ந்து வரும் காலத்தின் தேவையான புதுமையை ஏற்பதில்லை. புதுமை பழைமையை அலட்சியப்படுத்துகிறது. அதனால், நிலையான வளர்ச்சியில்லாமல் பழைமையாளர்களுக்கும், புதுமை வேட்கையுடையவர்களுக்கும் இடையில் ஓயாத சண்டை! பழைய சமய அமைப்புகள் புதிய சிந்தனையாளர்களாகிய அப்பரடிகள், விவேகானந்தர், வள்ளலார் ஆகியவர்களின் சிந்தனைகளை-கொள்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. புறத்தேயே ஒதுக்கிவிட்டன. இதனால் உலகப் பொதுச் சமயம் ஆவதற்குரிய தகுதியுடைய ஒரு சமயம்-நமது சமயம் வளரவில்லை. இந்தச் சிந்தனைகள் பாரதியை வருத்தியிருக்க வேண்டும்.

தமிழ்ச் சாதி காலத்தால் முந்தி தோன்றியது. கருத்தாலும் மூத்து வளர்ந்தது. ஆயினும் தமிழ்ச் சாதி காலத்தின் தேவைகளுக்கும் ஏற்றவாறு வளர வேண்டும் என்று பாரதி ஆசைப்படுகின்றான். அதே நேரத்தில் மாற்றங்கள், தனித் தன்மையை தனது அடிப்படை அறங்களை இழந்து விடுவனவாகவும் அமையக் கூடாது