பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

109



புதுமைகளை வரவேற்பவன். காலம் புதுமைகளைப் படைத்துத் தரவே செய்கிறது. ஆயினும் தேக்கத்தை விரும்புவோர் இல்லாமல் இல்லை. ஆனால், மாற்றங்கள், புதுமைகள் தோற்றத்தில் காணப்படுதல் பயன் இல்லை. தொழில் முறைகளில் மாறுதல் மட்டும் பயன்தரா.

தமிழகத்தைப் பொறுத்த வரையில் புதுமை வேட்டல் என்பது புறத்தோற்றங்களிலேதான். அடுத்து ஆவேசமான பேச்சில்தான்! சீர்திருத்தம் என்பது பழிதூற்றல் அல்ல. "சிறுமை குற்றமே துாற்றிவிடும்” என்பார் திருவள்ளுவர். காலத்தினாலாய மாறுதல்களைப் பெறாத எந்த இனத்திலும், அமைப்பிலும் ஒழுக்கக் கேடுகள் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. இன்னும் உண்மையைச் சொன்னால் ஒழுக்க நெறிகள் ஒழுக்கக் கேடுகளாகவும் தோன்றும். ஏன்? ஒழுக்கம் என்பதற்கு உலகம் கொண்டுள்ள பொருள் வேறு. எப்போதோ பாட்டன் காலத்தில் அவன் வாழ்ந்த சமுதாய அமைப்பில் அவனுக்கும் அவனுடன் வாழ்ந்தவர்களுக்கும் இசைந்ததாக இருந்த ஒரு ஒழுகலாறு ஒழுக்கம் ஆயிற்று. அது பேரன் காலத்துக்கும் பொருந்தி வந்தால் நல்லதுதான். ஆனால் பெரும்பாலும் பொருந்தி வராது. ஒரே வழி பொருந்தி வந்தாலும் மனச் செழுமையுடன் எடுத்துக் கொள்ளும் இயல்பு இருக்காது.

நமது நாட்டின் குடும்ப, சமூக, சமுதாய, சமய அமைப்புக்களில் இந்த முரண்பாடுகளை நிறையக் காண்கிறோம். நமது குடும்பங்கள் தோற்றத்தில் குடும்பங்கள் தாம். ஆயினும் வரதட்சணைக் கொடுமையும் பெண்ணடிமைத்தனமும் பல இடங்களில் ஒத்த உணர்வுகளைக் குடும்பத்தின் உள்ளிட்டை, காதற் செழுமையைச் சீரழித்து வருகின்றன. உடல்கள் கூடுகின்றன; உயிர்கள் கலப்பதில்லை. அதனால் தரமில்லாத மக்கட் பெருக்கத்தை நாட்டில் காண்கிறோம். 'சமூகம்' இருப்பது போல ஒரு தோற்றம். கூட்டங்களில் கூட்டமாகக்