பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




பாரதி கண்ட விடுதலை

பாரதி ஒரு நாட்டுக் கவிஞன். சமுதாயத்தின் தேவைகள் அனைத்தையும் அறிந்து பாடியவன். அவன் ஒரு விடுதலைக் கவிஞன். ஏன்? விடுதலை, சுதந்திரம் என்கிற சொற்களை தமிழ் இலக்கியத்தில் பாரதி தலைமுறையிலேயே பாரதியே முதன்முதலில் கொண்டு வருகின்றான். நாட்டு மக்களுக்குச் சுதந்திர உணர்வை ஊட்டி வளர்த்தவன் பாரதி. பாரதி அடிமையாகவே பிறந்தான்; அடிமையாகவே வாழ்ந்தான்; அடிமையாகவே மாண்டான். ஆனாலும் பாரதியின் ஆன்மா கவிதா உலகத்தில் சுதந்திரத்தைப் பெற்று விட்டது. பாரதி தன்னம்பிக்கையுடைய ஒரு கவிஞன். இலட்சியத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கையோடு பாடியவன். அதனால், இந்த நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே, "ஆடுவோமே. பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே" என்று சுதந்திரப் பள்ளு பாடுகிறான். வெறும் ஆவேசமான சுதந்திரப் பள்ளுவா? இல்லை; சுதந்திரத்தின் இலக்கணத்தை விரித்துப் பாடியுள்ளான். ஒரு சில நாடுகளில் சுதந்திரம் வரும். அந்தச் சுதந்திரம் ஒரு சிலருக்கு அதாவது வாழும் பேறு பெற்றவர்களுக்கே வரும். ஆனால், பாரதியின் சுதந்திரம், அத்தகையதன்று. முற்றாகச் சமுதாயச் சுதந்திரம், பொருளாதாரச் சுதந்திரம் ஆகியனவற்றையும் சேர்த்தே பாரதி சுதந்திரம் என்கிறான். ஆனால், பாரதி பிறந்த நாட்டில் பாரதி கண்ட சுதந்திரம் இன்னும் வந்தபாடில்லை.


"பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே-வெள்ளை
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே”

என்று பாரதி சமுதாயச் சுதந்திரத்தைப் பாடுகிறான். இந்த வரிகளில் உள்ள மாற்றங்கள் எதுவும் இன்னும் நடந்துவிடவில்லை. ஓர் அரங்கில் ஆறேழு சந்தியாசிகள் அமர்ந்திருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் பீடாதிபதிகள் மடாதி-