பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/126

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாழ்பவருக்குத் தகுதி இருக்கவேண்டும் என்பது பாரதியின் எண்ணம். கழனிகளில் உழுது உலகத்திற்கு உணவளிக்கும் தொழிலை வாழ்த்துகின்றான். பாரதி, ஆலைகளில் செய்யப் பெறும் தொழிலை வாழ்த்துகின்றான். நாட்டில் உழவரும், தொழிலாளரும் ஒருங்கிணைந்து செயற்படும் போதுதான் சமூக மாறுதல்கள் நிகழும்; புரட்சி தோன்றும்; சமுதாயம் வளரும். இது மனிதவியல் விஞ்ஞானத்தின் முடிவு. இதனை பாரதி. "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்று பாடுகின்றான். ஆனால், நாடு விடுதலை பெற்று 34 ஆண்டுகளாகியும் உழவுத் தொழில் உயர்ந்தபாடில்லை. எந்த ஒரு மனிதனும் 'உழவன்' என்று கடிதத் தலைப்பு வைத்துக் கொள்ள முன்வரவில்லை. இன்னமும் உழவனும் தொழி லாளியும் கூலி உயர்வு கேட்டுக் கொண்டுதான் கொடி தூக்கிக் கொண்டிருக்கிறான். உழவனும் தொழிலாளியும் உற்பத்தி செய்யும் பொருள்களுக்குரிய விலையை நிர்ணயிக்கும் உரிமை கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை. பாரதி நிந்தனை செய்து ஒதுக்கிய கூட்டம் வளர்ந்து வருகிறது. அதாவது வீணில் உண்டு களித்திருப்போர் வளர்ந்து வருகின்றனர். பாரதி போற்றிய உழவனும் தொழிலாளியும் இன்னமும் உயர்வினைப் பெறவில்லை.

'நாம் இருக்கும் நாடு நமது' என்னும் அறிவு வந்து விட்டதாக பாரதி பாடுகிறான். பாரதிக்கு அந்த அறிவு வந்திருக்கலாம். அவன் காலத்திய சில தலைவர்களுக்கு வந்திருக்கலாம். இன்றைய நிலை என்ன? நம் ஒவ்வொருவருக்கும் நமது வீடு மட்டும் தானே நமது நாடு போலத் தெரிகிறது. நாடு என்னும் ஒன்று நம் நினைவில் இருக்கிறதா? அப்படியே நினைவிலிருந்தாலும் நாடு நமக்குத்தான்; நாட்டுக்காக நாம் இல்லை என்னும் நினைப்பே ஆட்சி செய்கிறது.

எங்கும் சட்ட ரீதியான அடிமை இல்லையென்றாலும் அடிமைப் புத்தி அகன்றபாடில்லை. ஏன்? நாட்டில்