பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வளத்திற்கும் வலிமைக்கும் அந்நாட்டின் இயற்கை வளங்கள் மட்டும் காரணமாக அமையா. நாட்டில் வாழும் மக்களின் நினைப்புகளும் செயல்களுமே அயல்நாட்டிற்கு வளம் சேர்ப்பன; வலிமை சேர்ப்பன. நாட்டில் பிறந்து வளர்ந்து நாட்டிடைக் கிடைக்கும் வளங்களை நுகர்ந்து வாழும் மக்கள், தாம் வாழும் நாட்டிற்குத் தம்மை வாழ்விக்கும் நாட்டிற்கு வளம் சேர்க்க வேண்டாமா?

ஒரு நாட்டின் வளம் என்பது எடுத்தலும் வைத்தலும் என்கிற சுழற்சி முறையில் அமைய வேண்டும். நாம் எந்த அளவிற்கு வளங்களை எடுத்துப் பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு நம் நாட்டின் மண்ணுக்கும் மரத்திற்கும் மக்களுக்கும் கூட வளத்தைத் திருப்பித் தர வேண்டும். கொண்டும் கொடுத்தும் வாழ்தல் சமயநெறி மட்டுமன்று: அதுவே சமுதாய நெறி; நாட்டை வளர்த்துப் பாதுகாக்கும் பெரு நெறியும்கூட

வாழ்க்கை என்றால் வேற்றுமைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், நாட்டின் ஒருமைப்பாட்டை உருக்குலைக்கச் செய்யும் வகையில் வேற்றுமைகளைப் பாராட்டுதல் நாட்டிற்கு நல்லதல்ல. மனித வாழ்க்கையில் எத்தனையோ தேவைகள்! ஆனால், எல்லாத் தேவைகளிலும் ஒத்துப்போதல், ஒன்று படுதல், ஒருமைப்பாடு பேணல் ஆகியவை முதன்மையானவையாகும். மொழி, சமயம், இனம் இவைகள் நாட்டின் ஒருமைப்பாட்டிற்குத் தடைகளாக அமையக்கூடாது. வாழ்க்கை வாழ்வதற்குத்தான். ஆனால், வாழ்வித்து வாழ்வதுதான் நாகரிக வாழ்க்கை மற்றவர்க்குப் பயன்படாமல், மற்றவர்களை வாழ்விக்காமல் தாம் வாழ்வது கொச்சைத்தனமானது, கீழ்மையானது. உயர்ந்த வாழ்வியல் ஒருமையுணர்வு பரந்த நாட்டு அடிப்படையில்தான் தோன்ற முடியும். இன்று பரந்த நாட்டுணர்வு அழிந்துவிடவில்லையானாலும் மெல்லச் சிதைக்கப்படுகிறது என்பதை