பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/132

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

தவத்திரு குன்றக்குடி அடிகளார்




பாரதி சுதந்திரப் போராட்டத்தின் ஆவேசத்தை வளர்த்தவன். அவன் எண்ணற்ற தேசிய இயக்க-விடுதலை இயக்கப் பாடல்களைப் பாடியிருக்கிறான். ஊரவர் பசி தீர்க்க உடலை வளைத்து உழைக்காமல் உருப்படியான காரியங்களைச் செய்யாமல் "வந்தே மாதரம்” என்று முழக்கம் செய்து வயிறு வளர்ப்போர் அவன் காலத்திலும் இருந் திருப்பர் போலும்! இந்த மனப்போக்கைப் பாரதி மறுக்கிறான்! கண்டிக்கிறான்.

நாடு விடுதலை பெற்று 34 ஆண்டுகள் கடந்த பின்னும் நடப்பதென்ன? இன்று எங்கும் அரசியல்! எதிலும் அரசியல்? தன் வாழ்க்கைக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் யாதொரு தொழிலும் மேற்கொள்ளாமல் அரசியலையே பிழைப்பாகக் கொண்டவர் எண்ணிக்கை வரவர வளர்ந்து வருகிறது. இந்தக் காரணத்தால்தான் இந்திய நாட்டின் அரசியல் பொது வாழ்க்கையிலிருந்து ஊழலை ஒழித்துக் கட்ட முடியாமல் அந்த வட்டம் சுழன்று சுழன்று வருகிறது. நாட்டு மக்கள் மத்தியில் "யார் நல்லவர்?" என்கிற கேள்வி கூட இப்பொழுது, எழுப்பப்படுவதில்லை. "எவர் நல்லவர்?" என்று கேட்கின்றனர்! எவருமே நல்லவர் இல்லை என்பதே மக்கள் மன்றத்தின் பேச்சு! கிராமப்புறங்களில்கூட யாதொரு தொழிலிலும் முனைப்புக் காட்டாத இளைஞர்கள் அரசியற் கட்சிப் பணிகளில் மட்டும் ஆர்வம் காட்டுகின்றார்கள். சாதாரண மக்களைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் கவலைப்பட விரும்பாதவர்கள் தேர்தல் நேரத்தில் தெருத் தெருவாகச் சுற்றித் திரியும் வேடிக்கையைப் பார்க்கிறோம். மக்கள் நலத்துக்குரிய கொள்கை, செயல் ஆகியனவற்றைத் துணையாகக் கொண்டு மக்களின் ஆதரவைப் பெற யாரும் முயற்சி செய்வதில்லை. வண்ணச் சுவரொட்டிகள்! எடுப்பான ஊர்வலங்கள்! மிடுக்கானப் பேச்சுகள்! வளைந்து வளைந்து வரும் ஊர்திகள்! எதிரியைக் காரசாரமாகத் திட்டும். திட்டுக்கள்! செவிடனும் நொண்டியும் கூட்டுச்சேர்ந்ததைப்-