பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

123


கடைசியில் கிடைத்த கொள்ளையில் பங்கு போட்டுக் கொள்வதில் தகராறு ஏற்பட்டு அக்குழுக்களும் கூட கலகத்தின் களங்களாக மாறிவிடுகின்றன. இது போதாதென்று குழுக்களிடையிலும் சண்டை எந்த ஆட்சி அமைப்பிலும் விருப்பு, வெறுப்புகள் தலைவிரித்தாடுகின்றன. கட்சி வேற்றுமைகள் தடித்துத் தம் கட்சியைத் தவிர மற்ற கட்சியினருக்கு ஆள உரிமையில்லை; கருத உரிமையில்லை; வாழ உரிமையில்லை என்ற அளவுக்குக் கட்சி வெறி உணர்வுகள் உச்ச கட்டத்தை அடைந்துவிட்டன. தேர்தல் திருவிழாக்கள் நடந்தாலும் மக்களாட்சிப் பண்பு வளரவில்லை. வளர்ந்துள்ள தீமைகள் இவைதாமா? இல்லை! மேலும் வளர்ந்துள்ளன.

நாடு என்பது பொது. ஆட்சியென்பது பொது. இந்த மனப்போக்குடன் நாட்டின் செயல்கள் நடைபெறுவதில்லை. உற்றார், உறவினர் என்றெல்லாம் கருதி வரம்பு, எல்லைகளைக் கடந்தும்கூட நலன்கள் வழங்கப்படுகின்றன. தம்மைச் சாராதவர்களுக்கு வாழும் உரிமை இல்லையென்றே மறுக்கப்படுகிறது. இந்த நிலைமை நீடித்தால் நாடு சிலருக்குச் சொந்தமாகிவிடும். பலர், வாழ்க்கையை இழப்பர்.

இதனைப் பாரதி, பாரதத்தின் குருச்சேத்திரப் போரை மையமாக வைத்து விளக்குகிறான். போர்க்களத்தில் விசயன் அரசியல் நீதியைப் பார்க்காது உற்றார் உறவினரைப் பார்த்துச் சோர்கிறான். உறவின் பாற்பட்டுச் சோர்ந்திருக்கும் விசயனைக் கண்ணன் தேற்றுகிறான். அறம், நீதி இவைகளைப் பாதுகாக்கும் பணியில் உற்றாரைப் பார்த்தல் கூடாது; உறவினரைப் பார்த்தல் கூடாது; அறநெறியே முதன்மையானது என்று கண்ணன் விசயனுக்குக் கூறுவது பாரதிக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் இந்தப் பண்பு நாட்டில் வளரவில்லை. பொல்லாத சிறு நெறிகளில் இந்த நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது. அதிகாரத்தில் அமர்ந்திருப்பவர்கள் அவர்கள் கருத்தை, செயலை மற்றவர்கள்