பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/136

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விமரிசிப்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ஆத்திரப்படுகின்றனர். தம்மை-தம்முடைய கட்சியைச் சாராதவர்களைப் பகைவர்கள் போல எண்ணுகின்றனர். அவர்களுக்கு ஏது உரிமை என்றுகூடக் கருதுகின்றனர். எல்லா அமைப்புகளிலும் எல்லா இடங்களிலும் தமது அணியைச் சார்ந்தவர்களே அமர்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றனர். இந்த மனப்போக்கு முற்றி, கட்சிச் சார்பில்லாத ஒன்றியத் தேர்தல்கள் கட்சிச் சார்புடைய தாக்கப் பெற்றுவிட்டது. இனி, குடிக்கும் தண்ணீருக்கு ஏற்பாடு செய்வதிலும்கூட கட்சி புகுந்து வேலை செய்யும். இந்த மனப்போக்கு நாட்டின் பொதுமைக்கு நன்றன்று. வளரும் நாட்டுக்கு இயல்பன்று. பாரதி,

"வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர்,
நெஞ்சகத் தருக்குடை நீசர்கள்-இன்னோர்
தம்மொடு பிறந்த சகோதர ராயினும்
வெம்மையோ டொறுத்தல் வீரர்தம் செயலாம்"

(சத்ரபதி சிவாஜி)


என்று பாடுகின்றான்.

இன்று இந்தக் காட்சி எங்கே கிடைக்கிறது? ஒரு சாதாரண மனிதன் நாட்டின் ஆட்சியமைப்புக்கு உடன்படாத நிலையில் இயங்குகின்றான். ஏன்? காவல் துறையினரையே மிரட்டுகின்றான். பகல் வெளிச்சம் போல முறைகேடுகளை அவன் செய்ய வேண்டும். காவலர்கள் பார்க்காதிருக்க வேண்டும் என்று எண்ணும் அளவுக்கு எப்படி அந்தச் சராசரி மனிதனுக்கு எண்ணம் வந்தது? அவன் ஆளுங்கட்சியைச் சார்ந்தவன் என்ற ஒரே காரணம் தான்! இத்தகைய மனப்போக்கு நாடு முழுவதும் பரவிக் கிடக்கிறது. இதனை மூத்த தலைவர்கள் பார்த்தும் பாராதிருக்கிறார்கள். அதனால் முறைகேடுகள் என்பது பழக்கங்களாகிவிடும் போல் தோன்றுகிறது.