பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பாரதிக்கும் பொழுது புலர வேண்டும் என்பதே ஆசை; ஆர்வம்! பொழுது புலர்ந்த காலைப்பொழுதைக் கவிஞன் சித்திரிக்கின்றான். காலைப்பொழுதில் காக்கை கரையும். காக்கை கரைதல் பொழுது புலர்ந்ததன் அடையாளம்! சேவலும் கூவும். ஆனால், பாரதி காக்கையையே தேர்ந்தெடுத்தான். ஏன்? பறவையினத்தில் காக்கைக் குலமே உறவு கலந்து கூடி உண்டு வாழும் இயல்பினது. 'காக்கைக் கரவா கரைந் துண்ணும்' என்பது தமிழ்மறை. திருட்டுத் தனமுடைய காக்கைகளும் உண்டு, அவை அளவுகோல்களல்ல. யாரோ சிலருக்குப் பொழுது விடிந்து என்ன பயன்? மானிடரில் சிலருக்குக் கையும் மூளையும் வலிமையாக அமைந்து விடும். இந்த வலிமை மனிதகுல மேம்பாட்டுக்கு அல்லவா பயன்பட வேண்டும்! அதுதான் இல்லை. பிறர் பங்கைத் திருடிக் கொழுப்பவர்களுக்கு எந்த யுகத்திலும் விடியும்! மக்கள் கவிஞன் பாரதி, இங்கனம் சிலருக்குப் பொழுது விடிவதை ஏற்பானா? எல்லாருக்கும் பொழுது விடிய வேண்டும். அப்படியானால் என்ன பொருள்?

'சோற்றுக்குப் பஞ்சமில்லை
போரில்லை; துன்ப மில்லை'

(காலைப் பொழுது-20)

என்ற சமுதாய அமைப்பே பொழுது புலர்ந்ததன் உண்மையான அடையாளம்.

இன்றைய நிலை என்ன? முதலாளித்துவ நாடுகள் உணவுப் பொருள்களை நிறைய உற்பத்தி செய்து வளரா நாடுகளுக்கு வழங்கும் எண்ணத்தைப் பெறவில்லையே! போருக்குப் பயன்படும் ஆயுதங்களை உற்பத்தி செய்து, சின்னஞ்சிறு நாடுகளுக்கெல்லாம் கூட ஆயுதங்களை விற்பனை செய்து போர்ப்பதற்ற நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கும் இழிநிலையை என்னென்பது? முதலாளித்துவ உலகம் கொண்டுள்ள இந்தப் போர் வெறிக்கு ஓர் எல்லையில்லையா? நீர்வாயுக் குண்டைக் கண்டு