பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அந்தக் ஒரு காலத்தை உருவாக்குவான் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

காலத் தேரில் உலாவருகின்ற கருத்தை ஏற்றுக் கொண்டு மையொற்றுத்தாளைப் போலப் பேசி எழுதி விட்டுப் போகிறவர்களும் உண்டு. அவர்கள் காலத்தின் கருத்தைப் பிரதி பலிப்பவர்களே தவிர, காலத்திற்கு ஒரு கருத்தைக் கொடுக்க மாட்டார்கள்.

பாரதி தான் வாழ்ந்த காலத்திற்கு ஒரு கருத்தைக் கொடுத்தான். அதைவிட அவன் வாழ்ந்த காலத்திற்கு ஒர் உருவமும் கொடுத்தான் என்பது மிகையன்று.

இந்திய நாட்டினுடைய விடுதலைப் போராட்டத்தில் அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்களுடைய பெயர்கள் பொலிவோடும் வலிவோடும் புகழப்பட்டாலும் அதற்குரிய அடிப்படையான கருத்துப் புரட்சியைச் செய்து முடித்த பெருமை கவிஞன் பாரதிக்கே உண்டு.

விடுதலையைப் பற்றி அவன் கனவு கண்டான் என்று கூடச் சொல்லலாம். கனவு என்பதிலே இரண்டு, மூன்று வகை இருப்பதனால் நமக்கு ஒரு குழப்பம் ஏற்படும். சிலர் உறக்கம் வராமையின் காரணமாகக் கூட கனவு காண்கிறார்கள். அவர்கள் தின்று முடித்த கதைகளைப் பற்றியும் கனவு காண்பார்கள். அவை கனவாகா.

அறிவார்ந்த உணர்வில் நீண்ட நெடிய சமுதாய வரலாற்றை நினைவில் கொண்டு உறக்கத்திற்குப் போக முடியாமல் தத்தளிக்கின்ற மனம் காண்கின்ற ஒன்றுதான் சிறந்த கனவு. அந்தக் கனவுக்கு அறிவின் துடிப்பும், ஆள்வினையின் ஆற்றலும் இருக்க வேண்டும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அத்தகைய கனவுகளைக் கண்டவன் தான் பாரதி.