பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/146

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பள்ளுப் பாடுவோமே! ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று!" சுதந்தரம் அடைந்துவிட்டதாகவே பாடுகின்றான். அது கவிஞனின் திண்மையான கருத்தின் விளைவு என்பதை மறந்துவிடக்கூடாது.

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று -
ஆடுவோமே
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு-நாம்
எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு
சங்குகொண்டே வெற்றி ஊதுவோமே-இதைத்
தரணிக்கு எல்லாம் எடுத்து ஒதுவோமே! -
ஆடுவோமே

நாம் இருக்கும் நாடு நமது என்பது அறிவோம்!

நம் நாடு அடிமைப்பட்டுக்கிடந்த காலத்திலே அவன் சுதந்திரத்தைக் கண்டுவிட்டான். அந்தப் பாடலிலேயே மீண்டும் சொல்கிறேன். இந்த நாடு நிச்சயம் விடுதலை பெறத்தான் போகிறது என்பது அவனுடைய நம்பிக்கை ஆனால், இந்த நாட்டு மக்கள் விடுதலை பெற்ற பிறகாவது நாட்டுப் பற்றோடு இந்த நாட்டைக் காப்பாற்றுவார்களா? என்ற ஐயப்பாடு அவனுக்குத் தோன்றியிருக்கிறது. சிறந்த கவிஞர்களுக்கும் சான்றோர்களுக்கும் ஐயப்பாடு தோன்றுதல் நல்லதல்ல என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

"நாமிருக்கும் நாடு நமதென்ப தறிந்தோம்"என்று சொல்கிறான். இந்த நாடு அடிமைப் பட்டதற்குக் காரணம் அந்நியர்களுடைய படைவலிமை அல்ல என்பதை நாம் உணரவேண்டும். நமக்கு இருந்த பலவீனங்கள் - நோய்கள் தாம் அந்நியருக்கு இடங்கொடுத்தனவே தவிர, அவர்களுடைய படைவலிமை என்று யாரும் சொல்ல முடியாது.