பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

137



மனிதன் எதை உபாசிக்கிறானோ அவ்வண்ணமாக அவன் ஆகிறான். மனிதன் எதை நினைந்து நினைந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து பிராத்திக்கிறானோ அவ்வண்ணமாக ஆகிறான். எனவே சுதந்தரமாக இருக்கிற கடவுளை இந்த நாட்டு மக்கள் தொழுதால்தான் அவர்களுக்கும் சுதந்தரம் வரும் என்று அவன் நினைத்தான் போலத் தோன்றுகிறது.

ஆதலால், திருக்கோயில்களுக்குள்ளே இருக்கிற மூர்த்திகளுக்கெல்லாம் "சுதந்தரதேவி” என்று பெயர் மாற்றம் செய்கிறான். ஆனால், விடுதலைசெய்யப்பட்டு பாரததேவி போன்றிருந்த அந்தத் திருவுருவங்கள் மீண்டும் பூட்டுகளுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிற கொடுமையைப் பார்க்கிறோம். அதனால் தான் கடவுள் திருடு போகாமல் சிலைகள் திருடு போகின்ற நிலையைப் பார்க்கிறோம். ஞானம் குறைகிறது, ஆன்மீகம் தளர்கிறது என்பதை இதனால் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே நாட்டுப்பற்று மிகுதியாகச் செழித்து வளரவேண்டும். அப்போதுதான் பாரதியின் கனவுகள் நனவாகும் என்பதை மறந்து விடக்கூடாது.

தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்றி - எங்கள்
தாய் என்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா! - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா!

வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரியகடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா!

கு. VI. 10.