பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நாகரீக உலகத்தில் விலை பேச மாட்டோம். கடை வீதிக்குப் போனால் என்ன விலை போட்டிருந்தாலும் கொடுத்து வாங்கி வந்து விடுவோம்.

வீட்டு வாசற் படிக்குக் கீரைக்காரி கீரைக்கட்டு கொண்டு வந்தால் மட்டும் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் ஒரு பத்து நிமிடம் விலைபேசி விலையைக் குறைத்து ஒரு கீரைக் கட்டாவது அதிகமாக வாங்கினால் தான் அவருக்கு ஆத்மதிருப்தி. இது கிராமப்புறத்து ஏழை மக்களுடைய தலையிலே எழுதிய எழுத்துப் போலும்!

எனவே உழைப்பாளி விறகு வெட்டியிடம் "என்னப்பா அவன் மூன்று ரூபாய் கேட்பான்; நீ ஐந்து ரூபாய் கேட்கிறாயே!” என்பான் வேலை வாங்குகிறவன். விறகு வெட்டிக்கோ அன்று வேலை செய்யாது போனால் அடுப்பில் உலை வைக்க முடியாது. எங்கே இந்த வேலை கையை விட்டு நழுவிப் போய் விடுமோ என்ற எண்ணத்தில் "ஐயா கொடுப்பதைக் கொடுங்கள்” என்று குனிந்து வெட்ட ஆரம்பித்து விடுவான். "சரி, போனால் போகிறது. அவன் மூன்று ரூபாய் கேட்பான்; நீ இரண்டரை ரூபாய் வைத்துக் கொள்” என்று தாராள மனப்பான்மையுடன் வள்ளல் கொடுப்பார்!

ஒரு பெரிய மரம் தோன்றினால் அதன் கீழே புல்கூட முளைக்க விடாது. அதே போல் சமுதாய அமைப்பு அவ்வளவு மோசமாக இருப்பதைப் பாரதி புரிந்து கொண்டுதான் "ஆகா! என்று எழுந்தது பார் யுகப் புரட்சி! என்று சோவியத் புரட்சியை வரவேற்கின்றான்! பாராட்டுகின்றான். அதனுடைய வீச்சு அவனுடைய உரைநடை, கதை, கவிதை அனைத்திலும் இருந்ததைப் பார்க்கின்றோம்.

கடையத்தில் ஒரு சபை கூட்ட வேண்டும் என்கிறான். கிராமத்தின் சபைக்கு கிராமத்தின் சொத்தைப் பொதுவாக்க-