பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அணிந்துரை
சிற்பி பாலசுப்பிரமணியம்

அடிகளார் என்ற திருப்பெயரால் அனைவர் நெஞ்சிலும் உலா வந்த ஞானமணித் தென்றல் தவத்திரு தெய்வசிகாமணி பரமாசாரிய சுவாமிகள் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத் திருமடத்தைத் தமிழ் அன்னையின் திருமடி ஆக்கிய பெருமை அடிகளாருக்கு உண்டு.

ஆன்மிக உலகில் அருளின் தேரோட்டமாகவும் சமுதாயக்களத்தில் சமநீதிக்கான போராட்டமாகவும் அடிகள் திகழ்ந்தார்கள்.

சடங்கு சம்பிரதாயங்களில் மக்களைக் கட்டிப்போடும் தளை அல்ல சமயம் என்று அடிகள் கருதினார்கள். மனிதனை மாண்புறு மனிதன் ஆக்குவதே சமயப் பணி எனத் தேர்ந்து அப்பரடிகளைப் போல் தமிழகத்தின் முதல் தொண்டராகத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.

'குன்றக்குடிப் பெரியீர்
குமரனுக்கும் தமிழ் தருவீர்'

என்று கவியரசு கண்ணதாசன் நயந்தும் வியந்தும் உரைத்த நன்மொழிக் கேற்ப வானார்ந்த தமிழின் வளர்ப்புப் பண்ணையாக விளங்கினார்கள். எண்ணினார்கள், எழுதினார்கள், எண்ணற்ற மேடைகளில் வாழும் இலக்கியத் தைத் தம் வாய்மொழியால் வைர வைடூரியங்களாய் மெருகிழைத்துக் கொடுத்தார்கள்.

செயலுக்குக் குறியீடு தான் சொல் என்று கருதினார்கள். செயலாகாத சொல்லும், வடிவம் ஆகாத சிந்தனையும் வீண்ஆடம்பரம் என்று விலக்கித் தள்ளினார்கள்.

தண்டமிழுக்கு வாய்த்த தமிழ் மாமுனிவராய், அறிஞரையும், புலவரையும், கவிஞரையும் அரவணைத்துப்