பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

149


முதல் "சாதிகள் உண்டென்று சொல்வானும் இருக்கிறானடா இருட்டறையில்” என்று சொன்ன பாரதிதாசன் காலத்திற்குப் பின்னும் இருக்கிறது. இந்தச் சாதி, குல கோத்திரச் சண்டைகளை வேறுபாடின்றி ஆழ்வார்கள் நாயன்மார்கள் கூட எதிர்த்து வந்திருக்கிறார்கள். ஆனால் என்ன காரணம் பற்றியோ அசைந்து கொடுக்கவில்லை. இங்கும் அங்குமாக - தற்காலிகமாக-வாழ்க்கைத் தேவைகளுக்காக நகர்ந்து கொடுப்பது போலத் தெரிகிறது. ஆனாலும் உண்மையான மாற்றங்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்திய நாட்டினுடைய சமுதாய அமைப்பில், சாதிகள் ஆழமாக வேர்விட்டுப் போன ஒரு கொடுமை போலத் தெரிகிறது. இடைக் காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ நோய்க்கு மருந்து என நினைத்துச் செய்த சில மருத்துவ முயற்சிகள் அந்த நோயை வளர்த்திருப்பது போலத் தெரிகிறதே தவிர அவை மருத்துவமாக இருந்து நோயை மாற்றியதாகவும் தெரியவில்லை. நாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு சமுதாயத்தைத் தாழ்த்தப்பட்டவர்களாக்கி வைத்திருந்தோம். அந்தச் சமுதாயத்திற்கு மாற்றம் வேண்டும் என்கிறான் பாரதி.

நீ முதலில் உனக்குப் பக்கத்தில் இருக்கிற மனிதனுக்கு விடுதலைகொடுக்க மறுக்கிறாய். உன்னுடைய தெருக் கோடியில் வாழ்கிற மனிதனுக்கு விடுதலை கொடுக்க மறுக்கிறாய். நீ எப்படி அந்நியரிடத்திலே விடுதலை கேட்கமுடியும் என்பது போல அவனுடைய பேச்சு அமைந்துள்ளது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை உயர்த்த வேண்டும் என்று சொன்னான். "நந்தனைப் போலொரு பார்ப்பான் இந்த நாட்டினில் இல்லை" என்று சொன்னான். காண முடியாது. நேற்றும் கண்டதில்லை; இன்றும் காண முடியாது.