பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/162

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



கவலை தோன்றுகிறது

நாம் நந்தனார் தோன்றிய சமுதாயத்தில் இருந்து இன்னொரு நந்தனாரைத் தோற்றிவித்தோமில்லை, கண்ணப்பர் தோன்றிய சமுதாயத்திலிருந்து இன்னொரு கண்ணப்பரைத் தோற்றுவித்தோமில்லை ஏன் இந்த அவல நிலை? சமுதாய அளவில் அங்கும் இங்குமாகச் சில அசைவுகள் தோன்றினாலும், சத்தியமாக இந்த நாட்டின் சமயங்கள் முயற்சி செய்யவில்லை-துணியவில்லை என்று தெரிகிறது.

அரசாங்கம் என்ற இயந்திரம் மட்டுமே எப்படிச் சமத்துவத்தை உண்டாக்க முடியும்? அரசாங்கம் என்ற இயந்திரம் மட்டுமே எப்படித் தீண்டாமையை ஒழிக்க முடியும்? அரசாங்கம் என்ற இயந்திரம் மட்டுமே எப்படிச் சாதிகளை நீக்க முடியும்? அது தற்காலிக வைத்தியங்களைச் செய்கிறது. அந்த வைத்தியங்களோ மீண்டும் வேறு நோய்களாக மாறி விடுகின்றன.

ஆனால் நம்முடைய நல்லூழின்மையின் காரணமாக இந்த ஒதுக்கீடுகளை நிரந்தரமாகக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வோடு தமிழ்ச் சங்கங்கள் தோன்றி வளர்ந்த நாட்டில் சாதிச் சங்கங்கள் தோன்றி வளர்கின்ற கொடுமையினைப் பார்க்கின்றோம். ஆக, இந்தத் தலை முறையினை இந்த நாட்டில் சாதிகளுக்கு எதிராகச் சிந்திக்க வைக்க முடியாதோ என்ற கவலை தோன்றியிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் நாடாளுகின்ற அரசுகளுக்கு ஒரு 'வேண்டுகோள்! இதற்கொரு புதிய உத்தியை நாம் உடனடியாகக் கண்டாக வேண்டும். சாதி வேறுபாடுகளை அகற்றினாலொழிய இந்திய ஒருமைப்பாடு வலிமையாக முடியாது. நாம் எத்தனை கோடி மக்கள் இருக்கின்றோமோ அத்தனை கோடி பேதமும் இந்த நாட்டில் இருக்கிறது.