பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/166

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



அடுத்து, ஒரு நாடு யாரை மதிக்கிறதோ அதற் கேற்றவாறு அதனுடைய வளர்ச்சி இருக்கும். அறிஞனை மதித்தால் அந்த நாடு அறிவுத்திசையில் செல்லும். அதனாலே பாரதி நினைக்கிறான் "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்று முதன் முதலில் தொழிலைப் பற்றிப் பாடி இலக்கிய உலகத்தில் கொண்டு வந்து சேர்த்தவன் பாரதிதான்! காரணம் அவன் காலத்தில் தான் இந்தியாவில் தொழிற்புரட்சி தொடங்குகிறது.

பழைய காலத்தில் கைத்தறி போன்ற தொழில்கள் நம்மிடம் இருந்தாலும் அவை ஆலைகளாக தொழிற் சாலைகளாக உருமாற்றம் பெற்று மகத்தான சக்தியாக வளர்கிற காலத்தைப் பார்க்கிறான்! உழவுக்கும் தொழி லுக்கும் வந்தனை செய்வோம் என்று சொன்னான். ஆக, உழவர்களின், தொழிலாளர்களின் மதிப்பு உயர வேண்டும்.

இன்றைக்கும் கூட நான் வேடிக்கையாக நினைப்ப துண்டு. யாராவது தன்னுடைய கடிதத் தலைப்பில் "உழவன்” என்று போட்டிருப்பாரா, பாருங்கள்! "நிலக்கிழார்' என்று போட்டிருப்பார்கள்! அதுவும் கூட ஆட்சிக்குப் பயந்து கொஞ்ச நாள்களாகப் போடுவதில்லை. உழவன் என்று சொன்னால் அவன் தகுதியில் உயர்ந்தவன். “உழுவார் உலகத்தார்க்கு ஆணி’ என்று சொன்னான் வள்ளுவன். எனவே அவர்களுடைய தகுதி - மதிப்பு உயர வேண்டும் என்ற ஆசையில்,

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில்
உண்டு களித்திருப் போரை நிந்தனை செய்வோம்!”

என்று சொன்னான். உழைக்கின்ற உலகமும், தொழில் செய்கின்ற உலகமும் உயர வேண்டும் என்று சொன்னான்.