பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/168

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



பல நாடுகளில் போராட்டம் செய்கிறார்கள். ஒன்பது மணிக்கு அலுவலகமென்றால் 8.50 மணிக்கு வருவார்கள். அந்த 10 மணித்துளிகள் அலுவலகத்தின் முன்னே இருந்து முழக்கொலிகள் செய்வார்கள். ஒன்பது மணி அடித்தவுடன் தொழிற்சாலைக்கு உள்ளே சென்று விடுவார்கள். உற்பத் திக்குத் தடையில்லை. உற்பத்தி வேலைகள் - நாட்டின் பணிகள் தடையின்றி நடக்கும். அவர்களுடைய போராட்டங்கள் நாட்டின் நடப்பை நிறுத்தி விடா.

நாட்டில் அன்றாட நடப்புப் பணிகள் - உற்பத்திகள் தடைப்படாதவாறு நம்முடைய போராட்டங்கள் நடை பெறுகிற முயற்சிகள் தோன்ற வேண்டும். பாரதி, ஒயுதல் செய்யோம் - தலை சாயுதல் செய்யோம் என்று சொல் கிறான். கடமைகளைச் செய்வதில் - நாட்டினுடைய பணிகளைச் செய்வதில் ஒருபோதுகூட ஒயமாட்டோம் என்று சொல்கிறான். ஆனால் நம்முடைய நாட்டில் விடுமுறை - நாள்களுக்கு மிகுந்த வரவேற்பு! நல்ல இளைஞர்களுக்குக் கூட, பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நிகழ்ச்சி முடிந்து "விடுமுறை" என்று முதல்வர் சொல்லிவிட்டால் என்ன மகிழ்ச்சி! என்ன ஆரவாரம்!

வேலை நாட்களை விருப்பத்தோடு வரவேற்பதற்குப் பதிலாக விடுப்பு நாள்களை விருப்பத்தோடு வரவேற்பது என்பது இந்த நாட்டிற்கு நல்லதல்ல என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

நம் நாட்டினுடைய சூழ்நிலையில் நம்முடைய ஒரு சொட்டு இரத்தத்தைக் கூட, ஒரு வினாடியைக் கூட இந்த நாட்டை உருவாக்குவதில்தான் செலவழிக்க வேண்டும். இந்த நாடு எல்லா வளங்களும் பெற்ற பிறகுதான் ஓய்வு, உல்லாசம் எல்லாம் என்கிற மனப்போக்கைக் கொள்ள வேண்டும். இந்த வகையில் படித்தவர்கள் முன் மாதிரியாக இருக்க வேண்டும்.


ஆதரவுற்று இங்கு வாழ்வோம்-தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்!