பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/176

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாரதி, "ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள் உலகு இன்பக் கேணி" என்று கண்ட கனவு நனவாகும் சூழ்நிலை தோன்றியது. ஆனால் எங்கேயோ இடையிலே தளர்ச்சி தோன்றி மதச் சண்டைகளும் கலவரங்களும் தோன்றிக் கொண்டிருக்கின்றன. இந்த நாட்டின் வரலாற்றில் இனிமேலும் இத்தகைய நிகழ்வுகள் தோன்றினால் பாரதியின் ஆன்மா சாந்தி அடையாது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.


படித்தவர்கள்

பாரதி தெருத் தோறும் இரண்டொரு பள்ளிகள் வேண்டுமென்று கனவு கண்டான். அந்தக் கனவு நனவாகி விட்டது. எங்கும் பள்ளிகள்; எங்கும் பிள்ளைகள் படிக்கிறார்கள். அது நாட்டின் வரலாற்றில் பெரிய சாதனை என்றுகூடச் சொல்லலாம். கல்வித்துறையில் பாரதியின் கனவு நனவாகியிருக்கிறது. ஆனால், படிப்பினால் பாவம் தொலைந்து, படித்தவர்கள் சூது பண்ணாமல் பிறரை வாழ வைப்பதற்குரிய நல்லவர்களாக ஆகவேண்டும் என்று ஆசைப்பட்டான்; கனவு கண்டான். அந்தக் கனவு முற்றாகக் கெட்டுப் போய்விட்டது என்று நான் சொல்லவில்லை. ஆனாலும் படித்தவர்கள் இந்த நாட்டுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய முடியும் என்று நம்புகிறேன். அவர்கள் நாக்கு உழவர்கள்-சொல்லேர் உழவர்கள், வில்லேர் உழவர்களைவிட வலிமையானவர்கள். இந்த நாட்டின் படித்தவர்களை, பேராசிரியர்களை அன்போடு பாராட்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

ஓய்வு நேரத்தில் சமுதாயத்தைப் படிப்பிக்க கற்றுக் கொள்ளுங்கள், பழகுங்கள். இந்தச் சமுதாயத்தை விழித்தெழச் செய்யுங்கள். தெளிவாகச் சொன்னால் சுதந்தரம் பெற்றபிறகு ஏதோ ஒரு தொய்வு ஏற்பட்டிருப்பது போலத் தெரிகிறது. மீண்டும் ஓர் எழுச்சியை உண்டாக்க வேண்டும்.