பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/179

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

167


விழா"வாக இன்னும் கொண்டாட நாம் முன் வரவில்லை. நாட்டுக் குடியரசுநாளை எல்லோரும் சேர்ந்து கொண்டாடுகிற மனப்போக்கு இன்னும் உருவாகவில்லை. நாட்டின் பொதுச் சொத்துக்கள் நம்முடைய சொத்துக்கள் என்கிற குணம் நமக்கு வரவில்லை.

நம் நாடு அந்திய நாட்டிடம் கடன் வாங்குகிறது என்று சொன்னால் நான் கடன் வாங்குகிறேன் என்ற உணர்ச்சி தோன்றவில்லை. இந்த மனப்போக்குகளை மாற்றி இந்த நாடு என்னுடையது; மன்னும் இமயமலை என்னுடைய மலை; தென்குமரிக் கடல் என்னுடைய கடல் என்கிற மனப்போக்கில் இந்திய மக்கள் இந்தியர் என்ற உணர்விலே தம்மை ஆக்கிக்கொண்டு - உருவாக்கிக் கொண்டு இந்திய நாட்டை வளப்படுத்த வேண்டும் என்று பாரதி கனவு கண்டான்.

பாரதி ஏதோ பாடவேண்டும் என்பதற்காகப் படவில்லை. அவனை நாடு பாடவைத்தது. அவன் இந்த நாட்டை எப்படி உருவாக்க நினைத்தானோ அதற்காகப் பாடினான். அவன் வீடுதோறும் கலையின் விளக்கம் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். இந்த நாட்டின் சரிபாதியாக இருக்கிற பெண் மக்கள் எல்லா உரிமைகளும் பெற்று சட்டங்களும் பட்டங்களும் ஆண்டு அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அடுத்து பாரதி,


"எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை"

என்று பாடினான். அந்த ஓர் குல உணர்வுக்குச் சமுதாயம் இன்னும் நெகிழ்ந்து கொடுக்கவில்லை. குல கோத்திரச் சண்டைகள் மலிந்து கொண்டு வருகின்றன. அந்த வகையில் பாரதியின் கனவு நனவாகவில்லை. அரசு தரப்பில் பல கனவுகள் நனவாகியுள்ளன. ஆனால், சமுதாயமும் சமய