பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/224

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



ஒவ்வொரு வினாடியையும் கணக்கிட்டுக் காரியங்கள் செய்தல் வேண்டும்; பொருளை ஈட்ட வேண்டும்; வாழ்வாங்கு வாழ வேண்டும். உழைப்புக்கு அஞ்சக்கூடாது. கடின உழைப்புக்கும் அஞ்சக்கூடாது. உழைப்புக் களத்தில் தோன்றும் இடர்ப்பாடுகள் அனைத்தும் பயன் தருவனவே! படிப்பினைகளே! அஞ்சற்க!

வாழ்க்கையை விளக்கமுறச் செய்து வளர்ப்பதில் விமர்சனமும் ஒன்று. தற்பெருமை யுடையவர்கள் விமர்சனத்தைக் கண்டு அஞ்சுவார்கள். விமர்சனத்திற்கு அஞ்சுகிற அச்சம், அறியாமையை வளர்க்கும்; ஆற்றலைக் கெடுக்கும்; வளர்ச்சியைத் தடுக்கும்.

இன்று, பலர், விமர்சனத்திற்கு அஞ்சுகின்றனர். அதனால், காரியங்கள் பாழ்படுகின்றன. மிகப்பெரிய சமுதாய மையங்களில் இருப்போர், விமர்சனத்திற்கு அஞ்சுவதாலேயே சமுதாயத் தவறுகள் பல இன்று நிகழ்கின்றன. ஆதலால், விமர்சனங்கள் தவிர்க்க முடியாதன.

விமர்சனத்தில் ஏற்பன ஏற்றுச் செயற்படுத்துதல் நம்முடைய பொறுப்பு. இதில் அச்சத்திற்கு என்ன வேலை? செவி கைப்பச் சொன்னாலும் அச்சமின்றிக் கேட்டிடுக! திருத்தம் காண்க! ஏற்புழி ஏற்று இயங்குக!

பிறந்த அன்றே சாவும் உறுதி செய்யப்பெற்ற ஒன்று. ஆதலால், சாவு இயற்கை! ஏற்க வேண்டிய ஒன்றே! சாவிற்கு அஞ்சுவானேன்? அஞ்சுவதால் சாவைத் தவிர்த்திட முடியுமா? சாவைவிடக் கொடியது சாவைப்பற்றி அஞ்சுவது! சாவைப் பற்றி அஞ்சுவதால் வாழ்ந்து கொண்டிருக்கிற பொழுதுகளும்கூட, வாழ்வாக இல்லாமல் - பயன்பாடு இல்லாமல் போய்விடுகிறது! சாவு வரட்டும்! அஞ்சற்க! இன்றைய பொழுதில் நன்றாக வாழ்ந்திடுக!

சிலருக்கு, இன்றைய வாழ்க்கையில் கவலையில்லை! நாளைய வாழ்க்கையைப் பற்றியே கவலை! "நாளை” என்பது