பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/225

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

213


இன்றைய நாளின் தொடர்ச்சி! இன்றைய நிகழ்காலம் எப்படிக் கழிக்கப்படுகிறதோ அதைப்போலத்தான் நாளை அமையும்! நாளை நிகழக் கூடிய ஒன்றை, இன்றே நினைந்து கவலைப்படுவதால் - அந்தத் துன்பத்தைத் தவிர்த்துக் கொள்ள முடியுமென்றால், அச்சப்படுவது - கவலைப்படுவது தவறில்லை.

அச்சமும் கவலையும் காரியக்கேடு செய்வன! அச்சத்தால் இன்றைய கவலையே நாளைக்கும் தொடரும்; வேறொன்றும் நிகழ்ந்து விடாது. ஆதலால் நாளை வரப்போவதை எண்ணி இன்றே அஞ்சி அழுவானேன்? நடப்பது நடக்கட்டும் என்று இன்றைய வாழ்க்கையைத் துணிவுடன் நடத்துங்கள்.

இந்தத் துணிவு நாளைய வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களைச் சந்திக்கவும் துணை செய்யும்! நாளை எதிர்பார்த்த கேடும் வராமலேயே போய் விடும்.

வாழ்க்கை, இன்பமாக அமையத் துணை செய்யும் உறுப்புகளில் நட்பும் ஒன்று. நண்பராதல் எளிதன்று. நட்பைத் தேர்ந்து தெளிந்து கொண்ட பின்பு, அவர்கள் மாட்டு ஐயம் கொள்ளக் கூடாது! அவர்களால் ஒரோ வழித் தீமைகள் வந்தாலும் பரவாயில்லை!

நாம் நேர் வழியிலேயே அத்துன்பங்களைச் சந்தித்துச் சரிக்கட்டிக்கொள்ள முடியும். ஆதலால், எந்தக் காரணத்தை முன்னிட்டும் நண்பர்களிடம் ஐயம் கொள்ளற்க! அச்சம் கொள்ளற்க! நண்பர்களிடம் ஆழ்ந்த அன்பைக் காட்டுக!

இங்ஙனம் அச்சம் தோன்றுவதற்குரிய வாயில்களை அடைத்திடுக! அஞ்சாமல் வாழ்வதற்குரிய வாயில்களைத் திறந்திடுக! நன்னெறியில் நின்றிடுக!

அஞ்சாது வாழ்தலே உயிர் வாழ்தல், மனத்தில் அச்சமில்லாத வாழ்க்கையை மேற்கொள்ள, சாந்த குணத்தை