பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/227

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

215


தேவைகள்! இந்தத் தேவைகளையெல்லாம் வழங்கி நிறைவு செய்யும் உலகம், அன்புலகமாகத்தானே இருக்க முடியும்!

ஒரு நாளில் - பொழுதுகள் தோறும் தேவைகளை நிறைவு செய்யும் உலகம்! ஒருவர் வாழ்க்கையில் பருவங்கள் தோறும் ஏற்படும் தேவைகளை நிறைவு செய்யும் உலகம்! அம்மம்ம! எங்குப் பார்த்தாலும் அன்பின் ஆற்றல்! அன்றாட வாழ்க்கையில் அன்பு செய்யப் பழகிக் கொள்வோம்! பயன் பெறுவோம்!

மற்றவர் காட்டும் அன்பை அனுபவிப்போம்! அன்பைச் சுவைத்து மகிழ்வதே வாழ்க்கை! மற்றவர் இதயம் மகிழ அன்பினைப் பொழிவதே தியாகம்! அன்புக்கு விலை ஏது? அன்புக்குத் தடையேது? ஆனால், தாழ்ப்பாள் போடப்பட்ட வீடுகளும், கரவெனும் கதவால் மூடப்பட்ட இதயங்களும், தன்னலத்தால் தோன்றிப் பூட்டுக்கள் தொங்கும் வீடுகளும் அன்பிற்குப் பகையாகக் கச்சைக் கட்டிக் கொண்டு நிற்கின்றன! கதவிற்குத் தாழ் போடலாம். கள்ளமற்ற அன்புக்குத் தாள் போட முடியாது.

கரவாடும் வஞ்ச நெஞ்சையும் தூய அன்பு தாக்கி நெகிழச் செய்யும்! கனிந்த அன்புக்கு முன்னே காவல் ஏது? புண்ணியமிக்க அன்பின் முன்னே பூட்டுக்கள் இரா. ஆதலால், எப்போதும் அன்புத் தவம் செய்வோமாக! அன்பு தான் தவம்! தவம் தான் அன்பு! அன்பே சிவம்! அன்பே கடவுள்!

அன்றாட வாழ்க்கையில் நமது உயிர்ப்புக்குத் துணை செய்யும் மரம், செடி, கொடிகளிடம் அன்பாக இருப்போமாக! அவை உயிர்க்காற்றை நமக்கு வழங்கி நம்மை உயிர்ப்புடன் உலாவரச் செய்கின்றன! நாம் விடும் கெட்ட மூச்சுக் காற்றை அவை குடித்து நம்முடைய காற்று மண்டலத்தைத் தூய்மை செய்கின்றன. உடலியக்கத்திற்குத்