பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/232

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாரதியின் உரைநடை இலக்கியங்களில் தெளிவான சிந்தனை, கொள்கை, கோட்பாடுகள் இடம்பெற்றுள்ளன. பாரதியின் நெடிய கதைகள் சுவைத்துப் படிக்கத்தக்கன. அவற்றுள் சில பகுதிகள் கிடைக்காதது ஒரு பெரிய குறை!

பாரதியின் கவிதைகளிலும் சரி, உரைநடைகளிலும் சரி ஷெல்லி, விவேகானந்தர், தாயுமானார் போன்றவர்களின் தாக்கங்கள் நிறைய உள்ளன. அவர்களை ஆதரித்தும் எதிர்த்தும் பாரதி எழுதுகின்றான்.

ஆனாலும் பாரதிக்கு அவர்கள்பால் உள்ள ஈடுபாடு மிகுதி. அளப்பரிய மதிப்புணர்வும் உடையவனாகவே வளர்ந்திருக்கிறான். தாயுமானார் போன்றவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வற்புறுத்துகிறான்.

பாரதி, இந்தியா, பாரத தேசம் என்றெல்லாம் கூறி மகிழ்கிறான். 'இந்தியா'-என்றே ஒரு பத்திரிகையும் நடத்தினான். பாரதி நடத்திய பத்திரிகைகள் பல. ஆனால், போதிய ஆதரவு இல்லாமல் அல்லற்பட்டான்!

ஆயினும் கடைசி வரையில் ஊனில் உயிரும், உயிரில் உணர்வும் சுதந்திர வேட்கையுடையவனாகவே இருந்தான்! "எல்லோரும் இந்தியர்" என்று பெருமையோடு எண்ணுவதில், எழுதுவதில் பாரதி அனுபவித்த இன்பம் சொல்லிக்காட்ட ஒண்ணாதது.

இந்தியா, இந்தியர் - என்ற உணர்வுகளினூடே பாரதிக்கு, "பாரத ஜாதி"யை உருவாக்குவதில் இருந்த ஆர்வம் போற்றத்தக்கது. ஆம்! பாரத நாட்டில் வாழ்வோர் பாரத ஜாதி!

பாரதி காலத்தில் இந்தியா ஒரு பெரிய நாடு! பிரிவினைக்கு ஆளாகாத அகண்ட பாரதம் இருந்தது! பாரதத்தில் இந்துக்கள் வாழ்ந்தனர். பாரத ஜாதி, ஒரு மொழிக்கும் ஒரு மதத்திற்கும் உரியதல்ல! இது கலப்பு ஜாதி!