பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/243

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி தடத்தில் பாரதம்

231


பசியால் வாடித் துன்புறுவதாக அமைந்துள்ள சமுதாயத்தில் அன்பு பயிலுதல்-அன்பு வளருதல் இயலாது. சோற்றுப் பஞ்சத்தை நீக்கி, இங்கு வாழும் மாந்தருக்கெல்லாம் வயிற்றுக்குச் சோறிடுவதை முதல் இலட்சியமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்று மானிடம், சுவர்-வேலி இவற்றுக்கிடையே சொத்துக்களை முடக்கி சிறை வைத்துள்ளது. செல்வர்கள், அன்பு கருதியும், அறம் கருதியும் ஏழைகளுக்கு வாழ்வளிக்க முன்வர வேண்டும். அப்படி அவர்கள் வரவில்லையெனில், "நிலத்தைச் சகலருக்கும் பொது என்று அறிவிக்கவேண்டும்” என்று பாரதி முடிவு செய்கிறான்! அது மட்டுமா? உடையவர்களுக்கு ஓர் அறிவுரையும் கூறுகிறான்.

“ஏழைகள் வருந்தினால் தனக்கென்ன என்று நினைப்பவர் மூடர். பலர் அசெளகரியப்படும் வகையில் சிலர் செளகரியம் அடைதல் இந்த உலகத்தில் சாத்தியமில்லை" என்று பாரதி தெளிவு படுத்துகிறான்!

ஏழை - பணக்காரர்களுக்கிடையில் பரஸ்பரம் அருவருப்பும் அவமரியாதையும் வளர்ந்து பகை முற்றி வருகிறது. இதன் விளைவே காவல் முறை வளர்தல், பூட்டுக்களின் பெருக்கம்! சட்டங்கள் இயற்றப்படுதல், சிறைச் சாலைகள் அமைத்தல் முதலியன. இவையெல்லாம் துன்பத்தை மிகுதிப் படுத்துமே தவிர, தீர்வு சொல்லாது; தீர்வு செய்யாது.

ஆங்கிலக் கவிஞன் பைரன், மனிதர்களை "நாய்களே!” என்று அழைத்தான். பிறகு பைரன், தான் செய்த தவற்றைத் திருத்திக் கொள்கிறான். அதாவது, மனிதர்களை நோக்க நாய்கள் பரவாயில்லை. ஆதலால் மீண்டும் "மனிதர்களே!” என்று கூறுகிறான்.

மனித குலத்தைப் பற்றியுள்ள துன்பங்களுக்கெல்லாம் ஒரே ஒரு தீர்வுதான் உண்டு. அதுதான் அன்பு! அன்பே தீர்ப்பு! சகோதர உணர்ச்சியே தீர்ப்பு! ஆனால் சகோதர