பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/270

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொதுவுடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக் கொரு புதுமை!

என்பது பாரதியின் பாடல்!

இன்று வரை பாரதி விரும்பிய சமுதாயம் உருக் கொள்ளவில்லை! பாரத சமுதாயம் பொதுவுடைமைச் சமுதாயமாகவும் வளரவில்லை! சுதந்திரத்திற்கு முன்பிருந்த பின்னடைவுகள் சுதந்திரப் போராட்டத்தின் போது அமுங்கிக் கிடந்தன. நாடு சுதந்திரம் பெற்ற பிறகு மீண்டும் பிற்போக்குத் தனங்களும் பின்னடைவுகளும் தலைதூக்க லாயின. இது வருந்தத்தக்க நிகழ்ச்சி; வரலாறு.

வரலாறு மாற வேண்டாமா? பாரத சமுதாயம் வளர வேண்டாமா? ஆம்! கவிஞன் பாரதி, பாரத சமுதாய மாற்றத்துக்குரிய உந்து சக்தியைத் தந்தான்! ஆயினும், மாற்றம் ஏற்படவில்லை. பொதுவுடைமைச் சமுதாய அமைப்பே இன்று உலக அரங்கில் கேள்விக்குறி! ஆயினும் மனிதன் உலகாயதத்திலும் பொருளாதாரத்திலும் ஆன்மிகத்திலும் வளர்ந்து முழு மனிதன் ஆக வேண்டின் பொதுவுடைமைச் சமுதாய அமைப்பே துணை செய்யும். உடைமைகள் கருவிகளே தவிர இலக்குகள் அல்ல. மானுடத்தின் இலக்கு இங்கு அமரர் இன்பம் காண்பது, மானிடர் பிறரைக் கொல்ல நினையாமல் வாழும் மனச் சான்று மிக்க வாழ்க்கையை நடத்தும் முறை காண்பது. இந்த உலகை இன்பக் கேணியாக்கல்! இதுவே பாரதியின் சிந்தனை!