பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மிக அழகாகப் பாடுகிறார். சுரண்டும் வர்க்கத்தைச் சார்ந்தவன் பாட்டாளிக்கு என்றாவது ஒருநாள் வடைபாயசத்தோடு சோறு போடுவான் - வேட்டி எடுத்துக் கொடுப்பான். இதைப் பார்த்து அந்த ஆளையும் நம்பக்கூடாது. அவனுடைய செயல் சுயநலத்தின் பாற்பட்டது.

'உள்ளம் என்பது ஆமை-அதில்
உண்மை என்பது ஊமை
சொல்வில் வருவது பாதி-நெஞ்சில்
துரங்கிக் கிடப்பது மீதி”


என்பது போன்ற அருமையான பல தத்துவப் பாடல்களைக் கவிஞர் கண்ணதாசன் பாடியிருக்கிறார். இத்தகைய கவிஞர்கள் எண்ணற்றோர் இருக்கின்றனர். அத்தகைய கவிஞர்கள் நம்மோடு வாழ்வதாலேயே அவர்களையெல்லாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. பாரதிக்குப் பின் கவிதை இலக்கியம் வளர்ந்திருக்கிறது-வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது - வளர வேண்டும். பாரதிக்குப் பிறகு, இந்த நாட்டின் வளர்ச்சித் திட்டங்களையும் பிற முன்னேற்றங்களையும் பாடும் சுதந்திரக் கவிஞர்களும், சோஷலிஸ்க் கவிஞர்களும் தோன்றித்தான் இருக்கின்றனர்.

'தம்மின் தம்மக்கள் அறிவுடைமை ஞாலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது


என்றார் திருவள்ளுவர். அப்பாவைவிட மகன் அறிவு வளர்ந்தவனாகத்தானிருப்பான்; அவன் தனது தந்தை என்பதற்காக எழுந்து மரியாதை கொடுப்பான். அது போல பாரதி, கவிதையுலகத்தின் தந்தையாக விளங்குகிறார். அதற்குரிய மரியாதையை நாம் கொடுத்துத்தானாக வேண்டும். எனினும் மரியாதை கொடுப்பதை வைத்துக்கொண்டு பாரதிக்குப் பிறகு கவிதை இலக்கியம் வளரவில்லை என்று முடிவு செய்யக் கூடாது; முடிவு செய்யாதீர்கள். பாரதிக்குப்பின் கவிதை வளர்ந்திருக்கிறது-வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இனிமேலும் வளரும்.