பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/310

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



மேலை நாட்டினர் நம்மைக் காட்டிலும் பல் துறையிலும் முன்னேறியிருக்கிறார்கள்-வளர்ந்திருக்கிறார்கள் -போற்றும் புதுமை பல கண்டிருக்கிறார்கள். ஆம். அவர்கள் புதுமையைப் போற்றுகிறார்கள். எனினும் பழமையைத் தூற்றிக் கொண்டே காலங்கழிக்கவில்லை. புதுமை கண்டு பிடிக்க முயல்கிறார்கள்.புதுமை வளர ஆக்கங் கொடுக்கிறார்கள்-புதுமை புதுமையெனப் புதுமை வேட்கை கொண்டு முன்னேறுகிறார்கள். இங்கோ, புதுமையை ஏற்பவர்கள், புதுமை வேட்கைக் கொண்டவர்கள் புதுமையைப் படைப்பதில் ஆர்வமும் அக்கறையும் காட்டுவதில்லை. பழமையை இழித்தும் பழித்தும் பேசிக் கொண்டே காலங் கடத்துகிறார்கள். பாரதியார் பழமையைப் போற்றினார். பழமையில் நின்று கொண்டு புதுமையைப் படைத்தார். இன்னும் சொல்லப்போனால், பாரதி பழமைக்கும் புதுமைக்கும் ஒர் இணைப்புப் பாலத்தை உருவாக்கினார் என்றே கூறலாம். சாளரத்தின் வழியாகப் புதிய காற்று வந்தால் அதனால் தீமை விளைவதில்லை. சமுதாயத்தில் சுயநலத்தின் காரணமாக-தங்கள் சுகபோக வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படும் என்ற அச்சத்தால் சிலருக்கு இந்தப் புதிய காற்று பிடிப்பதில்லை. அது அவர்கள் குற்றமேயொழிய காற்றின் குற்றமன்று. தேவையற்ற பழையன கழிதலும், பயன் விளைவிக்கும் புதியன புகுதலும் இயல்புதான். இதனையே,


'பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே'

என்று நன்னூல் நூற்பா ஒன்று பேசகிறது.

பொதுவாகப் பழைமையை விட்டுவிட்ட புதுமையும் வாழாது. புதுமையைத் தன்னுள் ஏற்றுக் கொள்ளாத பழமையும் வாழாது. அன்னச் சத்திரம் ஆயிரம் கட்டல்; ஆலயம் பதினாயிரம் நாட்டல், முதலியவற்றைவிட ஏழை ஒருவனுக்கு எழுத்தறிவித்தல் சிறந்தது; என்றார் பாரதி.