பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/320

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



காந்தியடிகளின் பண்பாட்டையும் சீலத்தையும் பாடிப் பரப்புவதன் மூலம் தலைவர்களுக்கு வேண்டிய குணங்களையும் ஒழுக்கத்தையும் நன்கு புலப்படுத்திவிட்டார்.

இறுதியாகத் தலைவர்களுக்கு இருக்க வேண்டிய மேலான ஒரு குணத்தைக் காட்டுகிறார் பாரதி. அதாவது தானே தலைவன் என்றெண்ணி இறுமாந்து தலை தடுமாறிப் போகப்படாது. தலைவர் தலைவனாக ஆண்டவன் ஒருவன் என்றுமுள்ளான் என்பதை மறக்காமல் நடக்க வேண்டும் என்றெல்லாம் எச்சரிக்கிறார்-வதி காட்டுகிறார் பாரதி.

ஒரு தலைவன் என்றும் எப்பொழுதும் கடவுளை மறவா உள்ளத்தவனாயிருக்க வேண்டும் என்பதை எத்த னையோ இடங்களில் சுட்டிக் கொண்டே போகிறார் பாரதி. மாஜினியின் உறுதிமொழியை "பேரருள் கடவுள் திருவடி ஆணை” என்றே பாரதி தொடங்குகிறார். "ஈசன் இங்கு எனக்கும் என்னுடன் பிறந்தோர் யாவர்க்கும் இயற்கையின் அளித்த தேசம்" என்று நினைவூட்டுகிறார். உறுதி தவறினால் "ஈசன் என்னை நாசமே புரிக' என்று முடிவு கட்டுகிறார்.

பரிபூரண சுதந்திரப் பிரியரான பாரதி அடிமை நிலையை எவ்வளவு வெறுத்தார் என்பதை நாம் நன்கறிவோம். அதனால்தான் "பூமிதனில் எவர்க்கும் அடிமை செய்யோம்" என்று வீறுகொண்டெழுகிறார்: ஆனால் அப்படிச் சொன்ன வாயை மூடாமலே தொடர்ந்து "பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்” என்று பூரிப்புடன் முடிக்கிறார். அந்நியர்க்கடிமை செய்வது தாழ்வை யளிக்கும் என்றால் ஆண்டவனுக்கு அடிமை செய்வது வாழ்வை அருளும் என்று எவ்வளவு அருமையாகக் குறிப்பிடு கிறார் பார்த்தீர்களா? இங்ங்னம் தலைவனுக்கு வேண்டிய பிற குணங்களுக்கெல்லாம் மணிமுடியாகக் கடவுட்பற்றைக் கூறி நமக்கெல்லாம் நல்ல வழி காட்டுகிறார் வையத் தலைவர் பாரதி.