பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/334

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

322

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆண்களுக்குத்தான் வாய்க்கின்றனர். பெரும்பாலும் பெண்களுக்கு வாய்ப்பதில்லை. அண்மையில் நடந்த சென்னை இராசேசுவரியை, இ.ஆ.ப. தேர்வில் வெற்றி பெற்ற அவர் கணவன் கொன்ற செய்தியும் பூலான்தேவி வரலாறும் உணர்த்துவது என்ன? பெண்மையை இழிவுபடுத்தித் துன்புறுத்தும் இழிதகைமைக்கு இன்றே, இப்பொழுதே பாவேந்தன் நூற்றாண்டு விழாவின் போதே முடிவு கட்டுமின்! பெண், வேலைக்குப் போவது உண்மை. ஆனால் அவள் ஈட்டும் ஊதியம் கணவனுக்கே உரிமை உடையது. மறவாதீர்! இதுவா உரிமை? அவளாகக் கனிந்த காதல் ஒப்படைப்பில் தருதல் நன்றே! நிகழ்வு அப்படியல்ல! தட்டிப் பறிக்கின்றான் கணவன்! மகளிர் பணிகளுக்கு செல்வதால் அவர்கள் கூடுதல் நேரம் உழைக்கிறார்கள் என்பதையும் நினைவிற் கொள்க! வீட்டு வேலைகளையும் அவர்கள் மட்டுமே செய்கின்றனர். துணை நிற்கும் கணவன்மார் உண்டோ? உங்களுக்குத் தெரிந்திருந்தால் சான்று காட்டுங்கள்! இம்மாட்டோ? இன்று பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படுகின்ற கொடுமையையும் பார்க்கின்றோம்! பாரதிதாசன் நூற்றாண்டு விழாவின் நினைவாகப் பெண்கள் விடுதலை மலரட்டும்.

பெண்கள் படத்தை விளம்பரப் பொருளாகப் பயன்படுத்தும் கீழ்மையை அரசுகள் தடைசெய்ய வேண்டும்! "மலரினும் மெல்லிது காமம்" என்று வள்ளுவம் கூறும். பாவேந்தன் பாராட்டிய காதலுக்கு எதிரிடையாகப் பாலுணர்ச்சியைத் தூண்டிக் காமவெறியூட்டும் திரைப்படங்கள். ஆகா! ஆகா! எங்கும் எந்த நிலையிலும் ஆடவரும் மகளிரும் கூடிக் கல்வி கற்க வேண்டும். இளமை தொட்டே பாலுணர்வைக் கடந்த நிலையில் பெண்மையை மதிக்கும் மதிப்புணர்வு ஒழுக்கத்தை நமது இளைஞர்களிடம் வளர்க்கவேண்டும். முதலில் ஆடவர் மகளிரிடையே தோழமை உருவாதல் வேண்டும். பின் அது வாய்ப்புழி விருப்பம் கடைகூட்டும்போது காதலாக மலரட்டும்.