பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/337

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

325


கவிதைகளை இயற்றுதல் வேண்டும். படை நடத்தும் படை மறவனும் வாழ்தலுக்குரிய பயிற்சி பெறுதல் வேண்டும். கருவிகள் பல செய்து குவித்தல் வேண்டும். நிலத்தை உழுது உணவுப் பொருள்கள் விளைவித்துக் குவித்தல் வேண்டும். நிதியியல் ஆட்சிமுறை நூல்கள் பல காணுதல் வேண்டும். நுட்பம் சார்ந்த இயற்பியல் நூல்கள் பல படைத்திடுதல் வேண்டும். உண்மையைத் தேடும் நூல்கள் பலப்பல படைத்திடல் வேண்டும். இங்ங்னம் படைத்தவற்றைப் பேண அதிகாரம் பெறுதல் வேண்டும்! இன்றைய இளந்தமிழர்கள் இந்தப் பட்டியலில் உள்ள பணிகளை மேற்கொண்டால் அவர்கள் நலமுற்று வாழ்வர்; தமிழகமும் வளரும்.


உழைப்பவன் உயர்ந்தவன்

பாவேந்தன் உழைப்பை - உழைப்பாளர்களைப் பாராட்டி மகிழ்ந்தவன். பாவேந்தனின் படைப்பில் "வியர்வைக் கடல்" படிக்க வேண்டிய கவிதைகளுள் ஒன்று. உழைப்பவர்களின் வியர்வை கடலாகும் மாட்சியே கவிஞனின் காட்சி. இந்த உலகத்தின் படைப்புக்கள் அனைத்தும் உழைப்பாளர்களின் படைப்பு என்பது பாவேந்தனின் கருத்து! இல்லை! இல்லை! அந்தப் படைப்புக்களையே பாவேந்தன் வினாக்களைத் தொடுத்து விடை சொல்ல வைக்கின்றான். "நீங்களே, சொல்லுங்களேன்!” என்ற கவிதை அது. நன்செய்; நல்ல நிலம்; நெல் விளையும் நிலம்! இந்த நன்செய் நிலம் உழைப்பாளர்களின் உழைப்பால், நாள்தோறும் திருத்திய திருத்தத்தால் நன்செய் ஆயிற்று! எத்தனை உழைப்பாளிகள்? எத்தனை தலை முறைகள் வியர்வையை சிந்தி நிலமாக்கினர்.


"சித்திரச் சோலைகளே! உமைநன்கு
திருத்த இப்பாரினிலே-முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தன
ரோ! உங்கள் வேரினிலே!" -