பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/339

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

327


கூரையாகவும் கொண்டு வாழ்கின்றனர். அவர்கள் அறிந்த தெல்லாம் வயிற்றுப் பசியேயாம்!

'தாரணியே! தொழிலாளர் உழைப்புக்குச்
சாட்சியும் நீயன்றோ?-பசி
தீரும் என்றால் உயிர்போகும் எனச்சொல்லும்
செல்வர்கள் நீதி நன்றோ?"

(பாரதிதாசன் கவிதைகள் பக்.157)


என்று பாவேந்தன் கேட்கும் வினாவை இன்னும் எத்தனை யுகங்களுக்கு வினாவாகக் கேட்டுக் கொண்டிருப்பது? இந்தச் சிக்கலுக்குப் பாவேந்தன் ஒரு தீர்வும் கூறுகின்றான். என்ன அந்தத் தீர்வு! "இவ்வுலகு உழைப்பவர்க்குரியது?" என்பது தான் அந்தத் தீர்வு! இந்த உலக உடைமைகளை உழைப்ப வர்க்கு உரியதாக்கி விடுவதுதான்! இது எப்போது நடக்கும்! நடக்காது! நடக்காது! எதுவும் தானாக நடக்காது! நடக்கும்படி செய்ய வேண்டும். உழைப்பாளர்கள் கெஞ்சு தலை விட்டொழிக்க வேண்டும். கிலியை விட்டொழிக்க வேண்டும். "வல்லாண்மையே வாழும் உரிமையுடையது” என்ற நியதிக்கேற்ப வலிவுடையராக விளங்கி இன்ப வாழ்வினைப் படைக்க வேண்டும். இந்த வார்த்தையே உண்மையான வார்த்தை!

"தனி உடைமை", இனிப்புத் தடவிய நஞ்சு, தனி உடைமை பற்றால் பொதுமையிலிருந்தே மனிதன் விலகத் தொடங்கினான்; மனித குலத்தை அந்நியமாக்கினான். உயர் சுவர்களும் அடைக்கும் தாழ்களும், பூட்டுகளும் கண்டு, தன்னைத்தானே சிறைப்படுத்திக் கொண்டான். இதனால் துன்பங்கள் பலமடங்காக வளர்ந்தன. ஆதலால், பொது வுடைமைக் கொள்கைக்கு மீண்டும் ஒர் உயிர்ப்புக் கிடைத்து வருகிறது. பாவேந்தன் பொதுவுடைமைக் கவிஞன், மனித இதயங்களை அன்பினில் நனைத்தல், "இது எனது" என்னும்