பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/346

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

334

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கவிதைகளால் முன்னே தள்ளுகிறான்! நாம் தான் நகர்ந்தபாடில்லை! "புதியதோர் உலகம் செய்வோம்!” என்று அழைக்கின்றான். கவிஞனுடைய அழைப்பு அழைப்பாகவே இருக்கிறது! தமிழர் காதில் வீழ்ந்ததாகத் தெரியவில்லை. சிலர் காதில் வீழ்ந்ததாகக் காட்டிக் கொண்டார்கள்! ஆயினும் செயல் இல்லை. பாவேந்தனுடைய உலகப்பன் பாட்டைப் படியுங்கள்! இந்த உலகப்பன் பாடிய பாடல் ஆண்டு 1936-க்கு முன்பாகும். இடையில் இவ்வளவு ஆண்டுகள் ஓடியுள்ளன. என்ன நடந்தது?

"பொத்தல் இலைக் கலமானார் ஏழை மக்கள்
புனல்நிறைந்த தொட்டிபோல் ஆனார் செல்வர்"

என்ற நிலை. இன்று நாமே ஆள்கின்ற குடியாட்சியில்கூட மாறவில்லையே? மாறாதது மட்டுமல்ல. மேலும் கெட்டிருக்கிறது. பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகியுள்ளான். ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகின்றனர். இலவச உணவு, இலவச அரிசி, இலவச உடை, இலவசத் திருமணம் இவையெல்லாம் நமக்கு என்ன போதிக்கின்றன? ஏழ்மை போகவில்லை! ஏழ்மையின் கொடிய வெப்பம் இலவசத்தால் தணிக்கப் பெறுகிறது! அவ்வளவுதான்!

பொதுவில் நடத்து

பாவேந்தன் உணர்ச்சிக் கவிஞன் மட்டுமல்ல. திட்டமிட்டு மக்களை ஆற்றுப்படுத்தும் கவிஞன்! உலகம் உன்னுடையது அற்புதமான படைப்பு! காலத்தை வென்று விளங்கும் படைப்பு! கவிதையின் முற்பகுதியில் மனிதன் தாழ்ந்து வீழ்ந்த நிலையை விளக்கி இடித்து எடுத்துக்கூறி மனிதனை எழுப்பி, நிற்கச் செய்கின்றான்! பாவேந்தன்! புதிய மனிதனாக்குகின்றான்! உலகத்தை நடத்துக என்று ஆணை தந்து இயக்குகின்றான்.