பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தலைவர்களுக்குப் பாரதி காட்டும் வழி

23


பணியுணர்ச்சியோடு பணிசெய்ய வேண்டும். அயர்ச்சியும் தளர்ச்சியுமற்றவனாய் அப்பணியின்றி, வேறெந்தத் தொழிலிலும் ஈடுபடா ஏகாக்கிர சித்தமுடையவனாய் நிற்கவேண்டும். அதில், எவ்வாற்றாலும் தவறமாட்டேன் என்ற சங்கல்பத்தைத் திரிகரண சுத்தியுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த இலட்சிய வெறியைப் பின் வரும் இரண்டு பாடல்கள் மூலம் பாரதி காட்டுகின்றார்.

"இவருடன் யானுமிணங்கியே யென்றும்
இதுஅலாற் பிறதொழில் இலனாய்த்
தவறறு முயற்சி செய்திடக் கடவேன்
சந்ததமும் சொல்லினால் எழுத்தால்,
அவமற செய்கை யதனினால்
இயலும் அளவெலாம், எம்மவரிந்த
நலமுறு சபையினொரு பெருங்கருத்தை
நன்கிதின் அறிந்திடப் புரிவேன்”
"இன்றும் எந்நாளும் இவைசெயத்
தவறேன் மெய்யிது, மெய்யிது, இவற்றை
என்றுமே தவறிழைப்பனேல் என்னை
ஈசனார் நாசமே புரிக,
அன்றியும் மக்கள் வெறுத்தெனை யிகழ்க
அசத்தியப் பாதகஞ் சூழ்க
நின்ற தீயெழுவாய் நரகத்தின் வீழ்ந்து
நித்தம் யான் உழலுக மன்னோ”

இவை ஏதோ மாஜினி எடுத்துக்கொண்ட பிரதிக்ஞையை அறிவிக்கும் சாதாரண ஒரு செய்தியல்ல. பாரதியும் வெறும் பத்திரிகை நிருபர் அல்ல. ஆனால் மக்களைத் தலைமை தாங்கி இட்டுச் செல்லும் தலைவர்களுக்கு இருக்கவேண்டிய குணங்களையும் அவர்கள் கொள்ளவேண்டிய பிரதிக்ஞையையுமே இதன்மூலம் செம்மையாக அறிவுறுத்துகிறார்.