பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/351

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

339


நடந்திருப்பது உண்மை. ஆயினும் போதாது. மேலும் கற்கும் வாயில்கள் பலவாகச் செய்தல் வேண்டும். கல்வியின் தரம் உயர்தல் வேண்டும் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

கேள்விச் செல்வம்

அறிவியக்கத்திற்குப் பயன்படுவது கேள்விச் செல்வம். "கற்றலில் கேட்டலே நன்று” என்பது வள்ளுவம். "செவிநுகர் கணி” என்பான் கம்பன். நமது பாவேந்தன். "மடமைத்தனம் கேள்வியால் அகலும்" என்கின்றான்! "இருள் நீங்கி ஒளி பரவுதல் போல” என்று உவமித்துக் காட்டுகின்றான். ஆம்! கல்வி கரையில; கற்பவர் நாள் சில, ஆயினும் கற்ற அறிஞர்களின் வாய்ச்சொல் கேட்பதால் குறைந்த காலத்தில் நிறைந்த அறிவைப் பெறமுடியும். எத்துறையிலும் மடமை இருக்காது. இது கவிஞனின் எண்ணம்.

"...கேள்வியால் அகலும் மடமை போல்
நள்ளிரவு மெதுவாய் நடந்து கொண் டிருந்தது"

(குடும்ப விளக்கு - பக். 5)

என்பது கவிஞனின் வாக்கு.

தீங்கிலாத் தமிழ்

பாவேந்தன், தமிழே தன்னுயிரெனக் கொண்டு வாழ்ந்தவன். பாவேந்தன் தமிழைச் சிறப்பித்துப் பாடியதைப் போல் வேறு யாரும் பாடவில்லை. தமிழுக்கு ஒரு இயக்க வடிவமே தந்தவன் பாவேந்தன் பாரதிதாசன்! தமிழை அவன் போற்றும் பாங்குகள் அற்புதமானவை. தமிழ் யாருக்கும் தீங்கு செய்யாது. தமிழ் தண்ணளியுடையது. "தண்ணார் தமிழ்” என்பது திருவாசகம், பாவேந்தன் "தீங்கிலாத் தமிழ்” என்று பரவுகின்றான்.

தலைவியின் தொண்டுணர்வு

பாரதிதாசன் காட்டும் குடும்பத்தில் காலை நேரத்தில் தமிழ்ப்பாடம் கற்பிக்கப் பெறுகிறது. குடும்பத் தலைவி தமிழ்