பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/354

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

342

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகள் எண்ணற்றவை உள்ளன.

தமிழ், அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த மொழியாக வளர்க்கப் பெறுதல் வேண்டும். புத்தம் புதிய கலைகள் தமிழில் வெளிவருதல் வேண்டும். தமிழில் அரிய கருத்துக்கள் உலக மொழிகளில் தரப்பெறுதல் வேண்டும். உலகத்தில் தமிழர் எங்கு வாழ்ந்தாலும் தமிழ்க் கல்வி பெற வாய்ப்பளிக்க வேண்டும். இத்திட்டங்கள் நிறைவேறப் பலகோடி ரூபாய்கள் தேவை. நாம் அனைவரும் பங்கேற்க வேண்டும். இன்று நாட்டுத் தொண்டில், தமிழ் வளர்ச்சிப் பணியில் யாரும் பங்கேற்க வருவதில்லை. இன்று பொதுத் தொண்டு, தமிழ்த் தொண்டு ஆகியன அரசுக்குப் பரிந்துரை செய்யும் பணி யளவில் சிறுத்துவிட்டது. "தமிழைப் பயிற்று மொழியாக்க வேண்டும்” என்று அரசைக் கேட்டுக் கொள்ளும் தீர்மானத்தை ஓர் அறையில் கூடி நிறைவேற்றி அனுப்புகிற அளவில் தமிழ்த்தொண்டு அமைந்துவிட்டது. தமிழ் வளர்ச்சித் துறையில் போராட்ட உணர்வு இல்லை! இந்நிலை மாறியாக, வேண்டும். தமிழ் வளர்ச்சி இயக்கம், மக்கள் இயக்கமாதல் வேண்டும். மக்கள் காசுகளைத் தமிழ் வளர்ச்சிக்கு-கழகத்திற்கு எண்ணித் தரவேண்டும். குடும்ப விளக்கின் தலைமகன் செய்து காட்டியது நமக்காகத்தானே! கெழுதகை நட்புக்குரிய கலைஞர் இந்த முயற்சியைத் தொடங்கி-தமிழர் இயக்கமாக ஆக்குதல் வேண்டும். இது நமது விருப்பம். பாரதிதாசன் நூற்றாண்டு விழாவின் சின்னமாகத் தமிழ்வளர்ச்சிக்கு நிறுவனம் காணவேண்டும். பலகோடி நிதியமைப்புடன் காணவேண்டும் தமிழர்களே, இந்த அமைப்பினைக் காணின் தமிழ் வளரும்! வாழும்!

ஆட்சிமொழிக் குழப்பம்

இன்று சட்டப்படி தமிழ்நாட்டில் ஆட்சிமொழி தமிழேயாம். ஆனால், நடைமுறையில் தமிழின் வளர்ச்சி நிலை ஆமைவேகம்தான். நடுவணரசின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் இருப்பதும் தமிழ் வளர்ச்சிக்குத் தடையாக