பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கடமை தவறிய தலைவர்கள் ஆண்டவனுடைய கோபத் திற்கும் பொதுமக்களின் இகழ்ச்சிக்கும் தவிர்க்க முடியாத பல தண்டனைகளுக்கும் ஆளாவார் என்பதைச் சுட்டிக் காட்டி கடமையாற்றும் நெறியிலே தலைவர்களுக்கு நல்ல வழி காட்டுகிறார் பாரதி.

மக்களை மக்களாகக் கருதவேண்டும்; அவர்களின் உணர்ச்சியையும், உரிமையையும் மதிக்க வேண்டும்.

"நாட்டு மாந்தர் எல்லாம்-தம்போல்
நரர்களென்று கருதார்
ஆட்டு மந்தையாம் என்று-உலகை
அரசர் எண்ணி விட்டார்

என்று சர்வசுதந்திரப் போக்கைக் கண்டிக்கின்றார் பாரதி. அத்துடன் அமையமுடியவில்லை பாரதிக்கு ஆம். பார்க்கு மிடமெங்கணும் நீக்கமற அப்பரமனையே தரிசிக்கும் பண்பாளன் பாரதி. அதனால் உயிர்கள் அனைத்தும் கடவுளின் உருவம்; கடவுளின் பிள்ளைகள் என்று மதித்துப் பரிவுடன் ஏன் பக்தியுடனே பணிபுரிய வேண்டும் என்று கூறுகிறார். வெறும் அறிவுரையாகக் கூறுவதைவிட அங்ங்னம் வாழ்ந்து சிறந்த தலைவர் ஒருவரை உதாரணமாகக் காட்டுவதே நலமெனத் தெளிந்து காந்தியடிகளை நம் மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். பாட்டைப் பார்ப்போம்:

"மன்னுயிர் எல்லாம் கடவுளின் வடிவம்
கடவுளின் மக்கள்என் றுணர்தல்
இன்னமெய்ஞ் ஞானத் துணிவினை, மற்றாங்கு
இழிபடு போர், கொலை, தண்டம்
பின்னியே கிடக்கும் அரசியல் அதனில்
பிணைத்திடத் துணிந்தனை பெருமான்"