பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

356

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இன்மையும் அதன் விளைவாகிய தற்சார்புமே பயத்திற்குக் காரணம். பாஞ்சாலிக்கு அநீதி இழைத்த பொழுதும் சமூகம் விழித்து எழவில்லை என்பதுதானே உண்மை! அன்று மட்டுமன்று. இன்று மட்டும் என்ன வாழ்கிறது? பாவேந்தன் பாரதிதாசன்,

"ஒரு தீமை கண்டால்
ஒதுங்கி நிற்றல் தீமை"

(குடும்ப விளக்கு - பக். 66)

என்று கூறும் அறிவுரை தமிழர் வாழ்வாக மலர்தல் வேண்டும்.

"இழுக்கொன்று
காணில் நமக்கென்ன
என்னாமல் கண்டஅதன்
ஆணிவேர் கல்லி
அழகுலகைப் - பேணுவதில்
நேருற்ற துன்பமெலாம் இன்பம்"

(குடும்ப விளக்கு - பக். 66)

என்பான் பாரதிதாசன். சமூக நியதிக்காகத் துன்பமுறுதலும் இன்பமே என்பது பாவேந்தனின் பண்பான அறிவுரை.

நல்லறம் நாடுக
இன்றைய சமுதாயத்தில் தன்னலம் - பொதுநலம் என்று அடிக்கடி பேசப்படுகிறது. இவ்விரண்டில் பொது நலமே உயர்ந்தது. பொதுநலத்தில் தன்னலம் அடங்கும்; ஆனால் தன்னலத்தில் பொதுநலம் அடங்காது. ஆதலால், பொதுநலம் போற்றுதலுக்குரியது. வழி வழி வந்த தமிழ் மரபு பொதுநலம் சார்ந்தேயாம். தமிழ்த் தலைமகன் பொருளிட்ட விரும்புவதுகூடப் பொதுநலத் துண்டுதலிலேயே என்று அகநானூறு கூறும்.