பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/375

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசன் உலகம்

363


கவிஞன் பாவேந்தன் பாரதிதாசன். காலத்திற்குப் புதிய வடிவம் தரப் போராடியவன் புரட்சிக் கவிஞன் பாரதிதாசன்!

திராவிடன், தமிழன், ஆரியன் என்ற வேற்றுமைகள் எழுத்தாலும் பேச்சாலும் பூதாகாரமாக வளர்க்கப்பெற்ற நிலையில் தோன்றிய பாவேந்தனை, இந்த இன, மொழி உணர்வுகள் தொடக்கத்தில் கவர்ந்தது வியப்பன்று.

தமிழர் அனைவரும் சூத்திரர், இழிமக்கள் என்று இழித்துரைக்கப்பட்ட நிலையில் யாரைத்தான் இனவுணர்வு தொடாது? இனமானம் இழந்து சூத்திரனாக மதிப்பிழந்து உரிமை இழந்து வாழ யார்தான். ஒருப்படுவர்? இன்றும் உயர்குடி ஆதிக்கம்-ஆணவப் பேய் கொட்டமடிப்பதைப் பார்த்தால் ஏன் திரும்பவும் பெரியார் பிறக்கவில்லை, பாவேந்தன் பிறக்கவில்லை, என்று கேட்கத் தோன்றுகிறது. அவர்கள் தொடங்கி வைத்த இழிவு நீக்கும் வரலாறு இன்னும் முடியவில்லையே!

பாவேந்தனின் இலட்சியம்

பாவேந்தன் பாரதிதாசன் இந்த இழிநிலையை நீக்கச் சூளுரைக்கின்றான். "சமூகமே, யாம்!!” என்று சமூக மனப்பான்மைக்கு உரமூட்டுகின்றான். அறிவுப் புயற்காற்றில், சாதி மதங்களின் பெயரால் வளர்ந்துள்ள மூட நம்பிக்கைகள் அலைக்கழிக்கப்படுதல் - வேண்டும், ஒழிக்கப்படுதல் வேண்டும். பின், அறவோருக்குப் புதியதோர் உலகம் செய்ய வேண்டும். இது பாவேந்தனின் இலட்சியம் - விருப்பம்.

"சாதிமத பேதங்கள் மூட வழக்கங்கள்
தாங்கிநடை பெற்றுவரும் சண்டையுல கிதனை
ஊதையினில் துரும்புபோல் அலக்கழிப்போம்; பின்னர்
ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்."

(பாரதிதாசன் கவிதைகள் - முதல் தொகுதி, பக். 146)