பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/378

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

366

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


"உலகில் பொதுவாட்சி ஒன்றே ஒன்று
நிலவுதல் கருதி நிகழ்த்திய திந்நூல்"

என்பன அந்த வரிகள். இந்த ஆத்திசூடியில் ஓர் உயர்கொள்கையைக் காட்டுகின்றான். மாந்தர் - ஆம் மனிதர் எவராக இருந்தால் என்ன? எந்த மொழி பேசினால் என்ன? எந்தக் கடவுளைக் கும்பிட்டால் என்ன? கும்பிடாமல் போனால்தான் என்ன? ஆணாக இருந்தால் என்ன? பெண்ணாக இருந்தால் என்ன? அதைப் பற்றியெல்லாம் எண்ணாதே! ஆராய்ச்சி செய்யாதே! "அனைவரும் உறவினர்" என்கின்றான். ஆம்! அனைவரையும் உறவினராக ஏற்பதற்குரிய இதயவிரிவு வேண்டும். அணுயுகத்தின் அழிவிலிருந்து தப்பித்துக் கொள்ளவாவது அனைவரையும் உறவினராக எண்ணக்கூடாதா? ஏற்கக்கூடாதா?

பொது நாட்டம்!

நாட்டை ஆள்பவர்களுக்குப் பொது நாட்டம் வேண்டும் என்பது பாவேந்தனின் கொள்கை. நமது நாட்டில் நிலவிய ஆட்சிகள்கூட சாதி, மதங்களைச் சார்ந்து நின்று ஒருகுலத்துக்கு ஒரு நீதி கற்பித்து ஆட்சி செய்தன. இன்று மட்டும் என்ன வாழ்கிறது? சமயச்சார்பற்ற அரசு என்பது கொள்கை. ஆனால், இந்தக் கொள்கையை நடைமுறைப் படுத்துவதில் அரசு வெற்றிபெற வில்லை. பேதம் - பிரிவுகள் எண்ணும் மக்கள் போக்கும் மாறவில்லை. அப்படி மாறியிருந்தால் ஏன் ஒரே அரசியல் சட்டத்தால் நாம் ஆளப்படவில்லை: இந்துச் சட்டம் ஏன்? இசுலாம் சட்டம் ஏன்? கிறித்தவச் சட்டம் ஏன்? "இராம ஜன்மபூமி - பாபர் மசூதி" விவாதம் ஏன்? விவாதத்தை முடித்து வைக்க அரசு தயங்குவதேன்? நாட்டில் சமயச் சார்பற்ற சமுதாயத்தைப் பற்றிய கவலையைவிட, வாக்குப் பெட்டி பெரிதாகத் தெரிகிறது போலும்! இன்று ஆள்வோர்கள் குறுகிய எண்ணங்களுக்கே ஆட்பட்டுள்ளார்கள். ஆட்சி நடத்தவே அரசியற் கட்சி! அதனால், இன்றோ அரசியற் கட்சியை,