பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/385

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

373


எல்லைகள்? பொய்ச்சாத்திரப் பிரிவுகள்: மதப்பிரிவுகள்: பேதம் ஏன்? பேதா பேதம் ஏன்? இவற்றால் பிரிவு ஏன்? ஒருமையுளத்தராக, ஒரு குலத்தவராக வையகத்தில் வாழ்ந்திடப் புவியை நடத்து! பொதுவில் நடத்து! இது பாவேந்தனின் ஆணை!

தன்னலம் உள்ளத்தைச் சுருக்கும், பொதுநலம் விரிவைத் தரும். ஆன்மாவை அடக்கி வளரும், தன்னலத் தையே வளர்க்கும். ஆன்மா பொதுநலமே நாடும். ஆன்மாவின் இயல்பான பொதுநல உணர்வு, மலர் மனம் நிகர்த்தது; கனியின் சுவையனையது. அறிவை விரிவு செய்ய வேண்டும். ஆம்! இன்று படிக்கக் கிடைக்கும் நூல்கள் பல, மத நூல்கள் உள்படப் பிரிவினையைக் கற்பிக்கின்றன; வெறுப்பையே வளர்க்கின்றன. வரலாற்று நூல்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்! வெறுப்புக்காட்டக் கற்றுக் கொள்ளக்கூடாது! அறிவை விரிவு செய்யும் நூல்களைத் தேடிப் படிக்க வேண்டும். அதாவது வாழ்வியற் பாங்கில் அறிவை விரிவு செய்து கொள்க! அறிவை அகண்டமாக்குக! விசாலப் பார்வையால் பார், இந்த மக்கள் உலகத்தை! மக்களை அணைந்து கொள்க! ஆறுகள் எல்லாம் கடலில் சங்கமம் ஆகின்றன. அதுபோல் மனிதனே, நீ மனித சமுத்திரத்தில் சங்கமமாகு!

கவிதையின் மணி மகுடமாக ஊனை, உயிரை, உணர்வைத் தொடும்வகையில் பாவேந்தனின் ஆணை பிறக்கிறது! "உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய்!” என்பதே அந்த ஆணை! நாமறிந்த வரையில் உலகில் எந்த ஒரு கவிஞனும் ஏன்? அருள்நெறியாளரும்கூட "உலகம் உண்ண உண்" என்றும் "உலகம் உடுத்த உடுப்பாய்!” என்றும் கூறினாரிலர். உலகத்தில் எல்லாரும் உண்டு, உடுத்து மகிழும் பொற்காலம் தோன்றுமா? பொதுவுடைமை, உலகத்தை வென்றெடுக்குமா? காலந்தான் விடை சொல்ல வேண்டும். இதோ கவிதையைப் படித்து அனுபவியுங்கள்.