பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/392

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

380

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



4. பாவேந்தனும் பைந்தமிழும்


பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் அவர்களே! பேராசிரியர் பெருமக்களே! இளைய பாரதமே! அனைவருக்கும் நன்றி, கடப்பாடு.

பாவேந்தன் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவை வழக்கம்போல் தமிழகம் இந்த ஆண்டில் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்தச் சொற்பொழிவும் அமைந்துள்ளது எண்ணத்தக்கது.

முன்னுரை

தமிழ் மொழி கவிதை மொழி! பல்லாயிரம் ஆண்டுகளாகக் கவிதையில் சிறந்து வளர்ந்துள்ள மொழி! பெரும்பான்மையான கவிஞர்கள் மறக்கப்பட்டு விட்டனர். அவர்களை மறந்தாலும் தவறில்லை. ஆயினும் மானுடத்தின் வாழ்வியலைக் குறிக்கோளாகக் கொண்டு மனித மேம்பாட்டுக்கு முற்போக்கு திசையில் இலக்கியம் படைத்த கணியன் பூங்குன்றன், திருவள்ளுவர், அப்பரடிகள், வள்ளலார், பாரதி, பாவேந்தன் ஆகியோரை மறத்தல் கூடாது; மறக்கவும் முடியாது. வாழையடி வாழையென வந்த கவிஞர் வரிசையில் தனக்கென ஓரிடத்தை அமைத்துக் கொண்டவன் பாவேந்தன்.

பாவேந்தன் தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்; ஒரு யுகம். அவன் 'ஓருலகம்' படைக்க விரும்பினான். "புதியதோர் உலகம் செய்வோம்" என்று பாடினான். ஆவேசத்துடன் பாடினான்; நமக்கும் ஆவேசத்தையூட்டினான்; அவன் பற்றவைக்கப் பயன்படும் நெருப்பு. பெருநெருப்பாக இருந்தாலும் பற்றப்படும்பொருளில் எரியும் இயல்பு வேண்டும். நமக்கு எரியும் ஆற்றல் உண்டா! பலநூறு ஆண்டுகளாக நாம் மூடத்தனத்தின் முடைநாற்றத்தில் முடங்கிக் கிடந்து வருகின்றோம். நாம் அவமானம், இழிவு, ஏழ்மை ஆகியவற்றைத் தாங்கிப் பழகிப் போனோம்.