பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/395

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

383


மேலும் குயில்கள் "கூ” என்று கூவும் ஒலியும், நாய்களின் "வாழ் வாழ்” என்று கத்தும் ஒலியும் கோழியின் "கோ" என்று கூவு ஒலியும் காற்று ஆம் என்று ஒலித்து அசைதலும் எல்லாமே தமிழ், தமிழியக்கம் என்று பாவேந்தன் விளக்கி தமிழ் இயற்கை தரும் மொழி என்று உறுதிப்படுத்துகின்றான்.

தமிழின் சிறப்பு

தமிழ் காலத்தால் மூத்த மொழி, கருத்தாலும் மூத்து முதிர்ந்து வளர்ந்த மொழி. காலத்தினாலாய இனிமையையும் எளிமையையும் பெற்று விளங்கும் மொழி. தமிழ், எழுத்து, சொல்லில் தெளிவான அமைப்புடையது. தமிழ் மொழியின் சொல் வளர்ச்சியிலும் தமிழ்ச் சொற்கள் பொருளுணர்த்தும் முறையிலும் தெளிவான அடிப்படை உண்டு. தமிழ்ச் சொற்களில் பல, பொருளை மட்டுமன்றி அப்பொருளின் பருவம், முதன்மை, அமைவு முதலியனவற்றையும் இயல்பில் உணர்த்தும் சொற்களாக அமைந்துள்ளமை தமிழுக்கே உரிய தனிச்சிறப்பாகும். தமிழ் எழுத்து, பேச்சு, இயல், இசை, கூத்து என்றெல்லாம் வளர்ந்து விளங்கும் மொழியாகும். மேலும் தமிழ், இலக்கண வரம்புகள் பெற்று விளங்கும் மொழியாகும். எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டும் இலக்கணம் இயற்றாமல் தமிழ் மொழியைப் பேசும் மக்களின் வாழ்க்கைக்கும் அகத்திணை என்றும் புறத்திணை என்றும் இலக்கணம் கண்ட ஒரே மொழி தமிழ். அதனால் தமிழை “ஒழுக்க வாழ்வின் உயிரே!” என்று போற்றுகின்றான், பாரதிதாசன். தமிழ் கூத்து, இசை, இயல் என்று முறையாக வளர்ந்த மொழி. தத்துவ இயலைச் சார்ந்த நூல்கள் பலவும் பெற்றுச் சிறப்புற விளங்கும் மொழி தமிழ்.

கொச்சைத் தமிழ் கூடாது!

பாவேந்தன் பாரதிதாசன் தமிழ் பற்றி அற்புதமான கனவு ஒன்று காண்கின்றான். அந்தக் கனவில் காதலி ஒருத்தி,