பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/396

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

384

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தன் காதலனைக் கொச்சைத் தமிழால் திட்டிப் பரிகசிக்கின்றாள். தலைவன், காதலியின் கொச்சைத் தமிழைக் கேட்டுப் பொறுக்க முடியாமல் சோர்ந்து விடுவதாகக் கனவு! இன்று தமிழ் கொச்சைப்படுத்தப்படுவதற்கு ஓர் எல்லையே இல்லை! நாளிதழ்கள், வார இதழ்கள், திங்களிதழ்கள் முதலிய இதழ்களில் கொச்சைத் தமிழைத் தவிர வேறு என்ன இருக்கிறது! இத்தகு இதழ்கள் விற்பனையாகும் வரை தமிழின் தரம் எப்படிக் காப்பாற்றப்பெறும்?

தமிழே நீ என்றன் ஆவி!

தமிழ் முறையாக வளர்ந்த ஒரு மொழி. பல நூறு ஆண்டுகள் கவிதையிலே வளர்ந்த மொழி தமிழ். நல்ல நூல்கள் மனிதரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் கருவிகளாகும். தமிழ் நூல்கள் தம்மைப் படித்தாரை வானில் உயர்த்தும் தகையன. இவைமட்டுமா? தொழில் நூல்கள், இசைத்தமிழ் நூல்கள் எல்லாம் பெற்று வளர்ந்த மொழி! தமிழ் நாளும் வளர்ந்து வந்த மொழி! தமிழை வளர்பிறை போல் தமிழர் வளர்த்தனர். சிந்தையில் தெளியுடைய புலனழுக்கற்ற அந்தண்மை பூண்ட அறிஞர்கள் தங்கள் உள்ளத்து உணர்வுகளை எழுத்தில் வடித்துத் தருவது இலக்கியம். இந்தப் பரந்த உலகின் அமைவுகளைத் தருவனவும் இலக்கியங்களேயாம். இலக்கியங்களைத் தமிழர் இயற்றமிழ் என்று போற்றுகின்றனர். ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் தமது உள்ளத்தில் எழுந்த உணர்வுகளையும் இந்த உலகின் வளங்களையும் விளக்கும் இயற்றமிழ் நூல்கள் பற்பல எழுந்தன. இசையில் தமிழ் வீறுகொண்ட நிலையில் வளர்ந்திருந்தது. தமிழ் ஆடற் கலைக்குத் தாய்!

இந்த நூற்றாண்டில் அல்லது 19-20-ஆம் நூற்றாண்டில் தமிழர்களாகிய நாம் தமிழ்ப் பாதுகாப்புப் பணிமட்டுமே செய்து வந்துள்ளோம். அதுவும்கூட முற்றாகச் செய்யப்-