பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

388

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்பது சுந்தரமூர்த்திசுவாமிகள் திருவாக்கு. ஆனால் இன்று ஏன் இந்த அவலம்? வழிகாட்டுவோராக யாரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டோம்! ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோராக விளங்கும் தமிழந்தணரை ஆசிரியனாக ஏற்றுக் கொண்டிருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது! ஏன் தமிழரசுகளைக்கூட இழந்திருக்க மாட்டோம்! அந்தோ இரங்கத்தக்க நிலை!

".......மக்கள் இடருற வடமொ ழிக்கே இடந்தந்து தமிழைக் கொல்வான்"(குறிஞ்சித்திட்டு பக்.20)

என்ற பாவேந்தன் பாடல் வரிகளை உணர்க.

தமிழில் பிறமொழிச் சொற்களை நுழைத்துக் கலப்படம் செய்பவரைப் "பேடி” என்று திட்டுகின்றான் பாவேந்தன். தமிழுக்குக் கேடு வந்தது, தமிழர் மறையெனப் பிறமொழி மறைகளை ஏற்றுக் கொண்டமையாலே தான்! தமிழர்க்கு மறை வடமொழியில் எப்படி இருக்க முடியும்? வடமொழி எப்படி தமிழரை வழி நடத்த முடியும்? தமிழர் தமது வாழ்வுக்கு, சமய வாழ்வுக்கு வடமொழி வழிகாட்டும் என்று நம்பும் வரையில் தமிழர் முன்னேற்றம் முயற்கொம்பேயாம். தமிழர்க்கு மறை திருக்குறளேயாம். முற்காலத்துத் தமிழர்தம் நிலையை,

"பிறமொழி தமிழிற் சேர்க்கும் பேடிகள் நுழைந்த தில்லை! அறமுதல் நான்கு கூறும் தமிழ்மறை அலால்வே றில்லை” (குறிஞ்சித்திட்டு பக்.3)

என்று பாரதிதாசன் விளக்குகின்றான்.