பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/417

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

405


அயல்வழியால் பல கடவுள் வழிபாட்டு நெறி புகுந்தது! தமிழ் வழியினர் அனைவரும் உறவினர்; ஒரு குலத்தினர். அயல்வழக்கு எண்ணத் தொலையாத சாதிகளைப் புகுத்தித் தமிழினத்தை உருக்குலையச் செய்து ஊடழித்தது.

"ஒன்றே அல்லால் குலமில்லை
ஒருவ னல்லால் தெய்வமில்லை
என்றதோர் தமிழரின் சொல்லை
மறந்ததால் அல்லவா வந்ததித் தொல்லை”

(தேனருவி-பக்.24)

என்ற பாவேந்தனின் பாடல்கள் கவனத்துடன் படிக்கத்தக்கன. இன்றும் தமிழகத்தைப் பல தெய்வ வழிபாடும் மூடத்தனமான சடங்குகளும் அலைக்கழிவு செய்து கொண்டுதான் உள்ளன. அயல் வழக்கின் பிடியிலிருந்து தமிழ் வழக்கை மீட்க வேண்டும்! இதுவே நமது கடமை! சிந்தனையில் தெளிவையும் சொல்லில் உறுதியையும் செயலில் செம்மையையும் அளிப்பதற்குத் தமிழ் உண்டு; தமிழ் மக்களுண்டு. நாளும் தமிழுக்குத் தொண்டு செய்வோம்! தமிழ் மக்களுக்குத் தொண்டு செய்வோம்! இதுவே இன்று பாவேந்தன் அடிச்சுவட்டில் செய்ய வேண்டிய கடமை!

இன்பத் தமிழுக்குத் தொண்டு செய்வோம் என்பதை இன்றையத் தமிழரின் குறிக்கோளாகவும் தமிழர் வாழ்வாகவும் அமைத்துக்கொள்வதே, பாவேந்தருக்குச் செய்யும் நன்றி! கடப்பாடு!

பாவேந்தன் ஒரு இயற்கைக் கவிஞன்; பிறவிக் கவிஞன். தமிழும் தமிழரும் நாளும் வளரப் பாடிய கவிஞன்! பாவேந்தன் புகழ் வாழ்க! வளர்க! பாவேந்தன் அடிச்சுவட்டில் துறைதோறும் தமிழை வளர்ப்போம்! வாழ்வோம்!