பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/419

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அண்ணாவும் இலக்கியப் படைப்பும்

407


தலைவர் தந்தை பெரியாரின் பாசறையில் புடம் போடப் பட்டவர். அதனால் அந்த மலர் பொன் மலராயிற்று.

பொன் மலரில் புதுமை மணமும் பொதுமை மணமும் கமழ்ந்து வீசுகிறது. உலகியல் முறைப்படி தந்தையினும் தனயன் சிறந்து விளங்குகிறார்; தந்தைக்குப் பெரு மகிழ்வு ஊட்டுகிறார்; பொது மக்களின் புகழ்மாவையை வாங்கிச் சூடுகிறார்.

அறிஞர் அண்ணா புதுமையில் வேணவா உடையவர். ஆயினும் பழைமையை வெறுப்பவரல்லர். இங்ஙனம் கூறுவது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? அண்ணாதுரைக்கா பழைமையில் வெறுப்பில்லை! இது புனைந்துரை! பொய்! என்று கருதுகிறீர்களா? நீங்கள் அப்படிக் கருதுவதில் தவறில்லை. ஏன்? இந்த நாட்டிலேயே பலர் அப்படித்தான் கருதுகின்றனர்.

ஆனால் நாம் கூறுவது உண்மை! சத்தியம்! வெறும் புகழ்ச்சியில்லை! அவர் பழைமையின் வெறுப்பாளர் அல்லர். ஆனால், உதவாப் பழைமைகளை ஒதுக்குகிறார்; நம்மையும் ஒதுக்கத் தூண்டுகிறார். உடைந்த பானையை, கிழிந்த பாயை, உயிரற்ற பிணத்தை யார்தான் பேணுவர்? அவை பயன்படா. அவற்றை ஒதுக்குவதே வாழ்க்கைக்குச் சிறப்பு.

அதுபோலவே நமது வாழ்க்கையின் வளத்திற்கும் ஏற்றத்திற்கும் பயன்படாத பழைமையை ஒதுக்குகிறார். “இறந்தது விலக்கல்” ஆன்றோர் மரபுதானே!

புலவர்கள் போற்றும் புறநானூறு, - கற்றவர்கள் போற்றும் கலித்தொகை, வையகம் போற்றும் வள்ளுவன் தந்த திருக்குறள் முதலியன இன்று தோன்றியனவா? நேற்று தோன்றியனவா? பல நூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பழைமையான நூல்கள் அல்லவா? அந்த நூல்களை அறிஞர் அண்ணா பாராட்டவில்லையா? இந்த வகையில் தந்தைக்கும் தனயனுக்கும்கூட முரண்பாடில்லையா?